Monday 31 July 2017

சுப்ரமண்ய புஜங்கம்...1


                                                                             சுப்ரமண்ய புஜங்கம்...1

                                                                                       
                                                                                        
                                          

ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய சுப்பிரமணிய புஜங்கம் திருப்புகழ் அன்பர்களால் பல பகுதிகளில் வைகாசி விசாகம் வழிபாட்டின் முன்பாக இசைக்கப்பட்டு வருகிறது,

முருகப்பெருமானின் அருளாசியுடன் புஜங்கத்தைபொருளுடன் தொடர்ந்து அன்பர்களுக்கு அளிக்க விருப்பம் கொண்டுள்ளோம்.

முதலில் சுப்ரமண்ய  புஜங்கம்  பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

 'புஜங்கம்' என்றால் 'தோளால் நகர்ந்து செல்லும் பாம்பு' என்று பொருள். இச்சொல் வடமொழியில் உள்ள ஒருவகை யாப்பைக் குறிக்கும். இப்புஜங்கக் கவியுள் அமைந்து கிடக்கும் சொற்கோவை பாம்பொன்று வளைந்து வளைந்து செல்லுவது போல் இருப்பதால் இத்தகைய கவிக்குப் புஜங்கம் எனப் பெயருண்டாயிற்று.

ஸ்ரீ ஆதிசங்கரரின் கல்வி, தவம், யோகம் முதலியவற்றின் மேன்மையைக் கண்டு பொறாமை அடைந்த அபிநவ குப்தர் என்ற புலவரொருவர் மந்திர ஏவலால் பகவத்பாதர்கள் காச நோயால் துன்புறச் செய்தார். இந்நோயால் இவர் தாங்கமுடியாதவாறு துடித்துத் தவித்தார். ஒருநாளிரவு சிவப் பரம்பொருள் இவருடைய கனவில் தோன்றி 'ஜயந்தி புரம்' எனும் திருத்தலத்தில் சூரபத்மனை   வென்றழித்துவிட்டு, 'ஜய வின்ப வடிவமாய்' விளங்கும் என் குமாரனாகிய செந்திற்குமரனைக் கண்டு வழிபட்டால் இக்கொடிய வியாதி அடியோடு உன்னை விட்டு நீங்கும் என்று கூறித் திருநீறும் அளித்தருளினார். ஆச்சாரியர் அதனை ஏற்று அணிந்து தம்மைப் பிடித்திருந்த நோய் நீங்கப்பெற்றார்.

மறுநாள் தம்முடிய யோக சத்தியால் திருச்செந்தூர் என வழங்கப் பெறும் ஜயந்தி புரத்தை அடைந்தார். அங்கு ஆதிசேடன் என்னும் தெய்வ நாகம் திருச்செந்தில்நாதன் திருவடிகளில் வழிபாடு செய்தலைக் கண்ணுற்றார். உடனே 'பாம்பு' எனும் பொருளைத் தரும் 'புஜங்கம்' என்னும் பெயரைக் கொண்ட புது வகை யாப்பில் வடமொழியில் முப்பத்து மூன்று கவிகள் கொண்ட திருப்பாமாலை படைத்துத் திருச்செந்திலாதிபன் திருவடிக்குச்
 சூட்டினார். இது தான் 'திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய புஜங்கம்' தோன்றிய வரலாறாகும்.

சுப்பிரமணிய புஜங்கத்திற்கு பல மஹான்கள் பல மொழியில் வியாக்யானம் எழுதியுள்ளார்கள்.நம் அன்பர்களில்   பலர் ஈடுபட்டு  ஆராய்ச்சியில் கூட இறங்கியுள்ளார்கள்.பலவிதங்களில் திரட்டி சேகரித்துள்ள அறிய பொக்கிஷங்களை அன்பர்களோடு பகிர்ந்து கொண்டு இன்புறுகிறார்கள்.

நம் வலைத்தளத்தில் அத்தகைய அன்பர்களை  கௌரவிக்கும் வண்ணமாக  அவர்கள்  படைப்புக்களை வெளியிடுவதை நோக்கமாக கொண்டுள்ளோம்.

அத்தகைய ஓர் அன்பர் சுப்பிரமணிய புஜங்கம்  அவரை எப்படி ஆட்கொண்டது என்ற முன்னுரையுடன் தொடங்குகிறார்.

"சுவாமி மலை வள்ளி-முருகன் திருக்கல்யாணம் என்ற அழைப்பிதழை பார்த்தவுடன் நாட்களை எண்ணத்தோன்றியது. அந்த எண்ணம் வருவதற்கு ஒருவாரம் முன்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்பர்  ஒருவர் இல்லத்தில்  திருப்புகழ் இசை வழிபாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை அளித்தான் முருகன்...அங்கு திருப்புகழ் இசை வழிபாட்டிற்கு செல்லும்போது சுப்ரமண்ய புஜங்கத்தை கேட்கவைத்தான் முருகன் ...திரும்ப திரும்ப படிக்க வைத்தான்...அந்த ஸ்லோகத்தில் உள்ள ஒத்த வரிகள் திருப்புகழில்  உள்ளது போல் தோன்றியது...

அருணகிரிநாதரை நாம் கண்ணால் காணவில்லை..
ஆதி சங்கரரை கண்ணால் பார்க்கவில்லை..
ஆனால் இரு மஹான்களின் வாக்குகளையும் , மந்திரமாக கேட்கமுடிகிறது....
அதில் ஓர் ஒற்றுமை இருப்பதையும் காண முடிகிறது.

ஆதி சங்கரர் ஜெபித்த சுப்ரமண்ய புஜங்கத்தின் முதல் ஸ்லோகத்தை  நமது குருஜி அவர்கள் திருப்புகழ் இசைவழிபாடு ஆரம்பத்தில் விநாயகர் ஸ்துதியில்  அமைத்துள்ளார்கள்..."

ஸ்லோகம் 

ஸதா பால ரூபாபி விக்நாத்ரி ஹந்த்ரீ
மஹா தந்திவக்த்ராயி பஞ்சாஸ்ய மாந்யா
விதீந்த்ராதி ம்ருக்யா கணேசா பிதாமே 
விதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாணமூர்த்தி:

விளக்கம் 

'ஸதா' ன்னா எப்பொழுதும்...

'பாலரூபாபி' ன்னா குழந்தை வடிவாக இருப்பவர்...
எப்பொழுதும் குழந்தை மாதிரி மனஸை உடையவர்..

'விக்னாத்ரீ ஹந்த்ரீ'  
விக்னம் என்ற மலையை பொடி பொடி ஆக்குபவர்.அருணகிரியார் கூற்று 

"அத்துயரது கொடு சுப்பிரமணிபடும்
அப்புனம் அதனிடை இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கண மணமருள் பெருமாளளே ..

'மஹாதந்தி வக்த்ராபி ' பெரிய ஒரு தந்தம் இருக்கு அப்படீன்னா யானை முகம் னு அர்த்தம்.

'பஞ்சாஸ்ய மாந்யா' 

'பஞ்ச 'னா  அகன்றனு அர்த்தம்...ஆஸ்யம் னா வாய் ..அகன்ற வாயினை உடையஇன்னொரு அர்த்தம்  பஞ்சாஸயம் னா சிங்கம்.
சிங்கத்தை கனவுல கண்டாகூட யானை பயந்து பிளிறுமாம்..இதைத்தான் சிம்ம சொப்பனம் அப்படினு சொல்வார்கள் போல் உள்ளது..ஆனால் இவர் யானையாக இருந்தாலும் சிங்கமெல்லாம் இவரை மதிக்கிறது என்று அழகாக சொல்கிறார்.

பஞ்சாஸ்யம் அப்படீங்கறதுக்கு இன்னொரு அர்த்தமும் இருக்கிறது.
ஐந்து முகங்களை படைத்தவர்ன்னு அர்த்தம்..ஐந்து முகங்களை படைத்தவர் சிவபெருமான்.
1) சத்யோஜாதம்.
2)வாமதேவம்
3) அகோரம்
4)தத்புருஷம்
5)ஈசான்யம் அப்படீன்னு ஐந்து முகங்களை படைத்த சிவபெருமானும் வணங்கும்....

(முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடி செய்த அதிதீரா)

 விதீந்த்ராதி ம்ருக்யா' 

விதி ன்னா பிரும்மா, இந்த்ராதி ன்னா இந்திரன்..பிரும்மா, இந்திரன் எல்லோரும் தேடிவந்து வணங்கும் பிள்ளையார்.

கணேசா பிதாமே...கணேசன் என்ற பெயர் கொண்டவர்..

விதத்தாம்  ஸ்ரியம் காபி கல்யாண மூர்த்தி;..

அவர் எங்களுக்கு மங்களங்களை .ஐஸ்வர்யங்களை ..கொடுக்கட்டும்
எப்போது நினைத்தாலும் சந்தோஷத்தை கொடுக்க கூடிய ரூபம் கணபதி ரூபம். பரம மங்களகரமான வடிவினர் விநாயகர்..

                                                                     புஜங்கம் இசை வடிவில் 


                                                                                                  

                                                           Utube  Link for ANDROID  and   IPAD   PHONE                                                                                  https://www.youtube.com/watch?v=LUvlKWe5AoY

                                                                    இளம் சிறார்கள் இசையில்

https://www.facebook.com/ragalabs/videos/vb.1633551423570722/1838715273054335/?type=2&theater
.

                                                   முருகா சரணம் 








Thursday 27 July 2017

அபிராமி அந்தாதி வரிசை 12

                                                                          அபிராமி அந்தாதி  வரிசை  12                                                                                                     


கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன் செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே! புவி ஏழையும் பூத்தவளே!



தொடர்ந்து விளக்கவுரை அளித்து வருபவர் சென்னை அன்பர் நீலா குமார் அவர்கள் 


(பல அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க  சொல்கிறோம்)

கண்ணியது உன் புகழ் 

நான் எப்போதும் பாடல்கள் கொண்டு பாடுவது உன் புகழ்

கற்பது உன் நாமம் 

நான் எப்போதும் கற்பது உன் நாமம்

அன்னையின் நாமங்கள் தக்க ஞானாசிரியரால் உபதேசிக்கப்பட்டு நம்மால் கற்கப்பட்டு, அதை நாம் கசடற ஓத வேண்டும். கற்கப்படுபவை திருநாமங்கள். அன்னை பராசக்தியானவள் நான்கோயில் கொண்டுள்ள ஒவ்வொரு திருத்தலத்திலும் ஒவ்வவொருதிருநாமம் பூண்டு ஒழுகுகிறாள். அவள் ஆயிரம் பேர் உடையவள். அத்திரு நாமங்களை கற்று ஓத வேண்டும். ஒவ்வொரு நாமாவிற்கும் ஒரு தத்துவம் உண்டு. ஒரு பிரபாவமும் உண்டு. மேலும் தேவி வழிபாட்டில் நாம பாராயணம் முக்கிய அங்கம் வகிக்கின்றது. அந்நாமாக்களை நாம் பாராயணம் செய்தால், அம்மை அவற்றைக் கேட்டுத் தன்னை அழைத்ததாக எண்ணி மகிழ்ந்து உதவ ஓடோடி வருவாள்."கற்க, கசடு அற" என்றார் திருவள்ளுவர். எல்லாக் கசடுகளையும் அறவே நீக்குவது அவள் நாமமே அல்லவா? அதனாலும், "கற்பதுன் நாமம்" என்றார் பட்டர்.
 ஏன்னா பாபங்களே நிறைந்தும், தர்மானுஷ்டானங்கள் குறைந்தும் இருக்கும் கலியுகத்தில் மனிதர்களுக்கு நாமஸங்கீர்த்தனத்தைத் தவிர வேறு கதியொன்றும் இல்லை. இதைத்தான் லலிதா ஸஹஸ்ரநாமமும் நமக்கு சொல்கிறது 

555. கலிகல்மஷ நாஸினி - கலிதோஷத்தைப் போக்குபவள்.
, நாமஸ்மரணம், மனதைக் கட்டுக்குள் வைக்கும். அன்னையை அறிய, முதலில் அவளது நாமத்தை விடாது தியானம் செய்ய வேண்டும். “அம்மா, உனது சிவந்த மேனியை எனது நெஞ்சில் வைத்து, உனது நாமத்தை இடைவிடாது தியானித்துக் கொண்டிருக்கிறேன்” என்று சொல்லுகிறார்.

கசிந்து பக்தி பண்ணியது உன் இரு பாத அம்புயத்தில் 

 என் மனம் கசிந்து பக்தி பண்ணுவதோ உன் இரு திருவடித் தாமரைகளில் (அம்புயம் - அம்புஜம் என்னும் வடமொழிப் பெயரின் திரிபு; அம்பு - நீர், ஜம் - பிறந்தது; நீரில் பிறந்த மலர் அம்புஜம்)

மனம் குழைந்து பக்தி பண்ணி நான் ஈன் திருவடித் தாமரைகளையே வழிபடுகின்றேன். கசிந்து பக்தி பண்ணும் போது மெய் புளகிக்கும். கண்களில் நீர் அரும்பும். வாய் குழறும். ' உளறினேன் அலறினேன் விண்மாரி பெய்ய இரு கண்மாரி பெய்யவே யர்ந்தேன்' என்பார் தாயுமானவர்.
ஒரு பொருளின் மீது நமக்கு ஆர்வம் உண்டாகுமானால், முதலில் அப்பொருளின் பெருமையை நாம் நன்றாக உணர்ந்திருக்க வேண்டும். முதலில் அம்பாளின் பிரபாவத்தை அறிந்து, அதில் ஆர்வம் கொள்ளவேண்டும். கொண்ட பின்னர், அம்பிகையின் திருமந்திர உபதேசம் பெறவேண்டும். அடுத்த கட்டம் மூன்றாவதான ' உபாசனை ' முறை : உபாசனை நிலைக்க சத்சங்கம் அவசியம்.
அவர், உள்ளம் எல்லாம் உருகி பக்தி பண்ணுகிறார். பக்தி பண்ணுகிறபோது அம்மையின் இரு பதாம்புயங்களையே எண்ணிக்கொண்டிருக்கிறார். கசிந்து மல்கி அதனையே எண்ணுகிறார். 

பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து 

நான் பகலும் இரவும் விரும்பிச் சேர்ந்திருப்பது உன்னை விரும்பும் அடியார் கூட்டத்துடன் தான் நான் எப்போதும் இருக்கிறேன்.இந்த உலகில் கடைத்தேற வேண்டுமென்றால்நல்லோர் கூட்டுறவு வேண்டும் . 

உலகில் கடைத்தேற, தேவியின் தியானம் இருந்தால் மட்டும் போதாது. இந்த மனது பிய்த்துக்கொண்டு ஓடி, கண்ட விஷய சுகங்களிலும் ஈடுபடும் இயல்புடையது. அப்போதெல்லாம், அந்த அம்பிகையின் பக்தர் குழாத்தின் சங்கம், கூட்டுறவு நமக்கு இருந்தால், அந்த சங்க மகிமையால் நமது உள்ளம் பண்படும். அவர்கள் அன்னையைப் பற்றிப் பேசும்போதெல்லாம், நமது மனமும், விஷய சுகம் நீக்கி, அன்னையின் அழகினிலே, அவளது பாதாரவிந்தங்களிலே ஈடுபடும்.

அம்மையின் பதங்கள் வேண்டுமென்றால், அந்த பாத தூளிகள் கிடைக்கபெற்ற அடியாரின் அனுக்ரஹமும் வேண்டுமல்லவா? அதனால், அம்மையின் ஆசி பெற்றவர்களை நாடித் தேடிச் சென்று அடைந்து இன்புறுகிறார் பட்டர். அந்த அம்மையை நினைத்து உருகுபவர்களை முதலில் அண்டிப் பேணி பயன் பெருகிறார்.
சத்சங்கத்வே நிச்சங்கத்வம்"என்று சங்கரர் கூறியது போல, தனிமையும், அந்த தனிமையினால் விளையும் தவமும் கை வர வேண்டுமென்றால், முதலில் நல்லடியார் கூட்டம் தனில் சேர வேண்டும

நான் முன் செய்த புண்ணியம் ஏது என் அம்மே! 

"நான் முன்பு என்னபுண்ணியம் செய்தேனோ? சிவனை நினைத்துஇப்பிறவியில் வணங்கும் பேற்றியனுக்கு ' என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே ' - என்பார் திருஞான சம்பந்தர்.

 இறைவியை இப்போது வணங்க முற்பிறவிகளில் புண்ணியம் பல செய்திருக்க வேண்டும் என்பது கருத்து. புண்யலப்யா ( லலிதா சகஸ்ரநாமம் 543) - புண்ணியத்தால் அடையத்தக்கவள் அவள்.
நான்முன் செய்த புண்ணியம் ஏது! என் அம்மே! என்று அபிராமபட்டர் மிக உருக்கமாக அன்னையிடம் கேட்கிறார். 

இதனையே ஆதிசங்கரர், தனது ஸௌந்தர்ய லஹரீயில் முதல் ஸ்லோகத்தில், " ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத- புண்ய: ப்ரபவதி" என்று கேட்கிறார்.அதாவது "புண்ணியம் செய்யாதவன் உன்னை வணங்குவதற்கோ அல்லது துதிப்பதற்கோ எங்ஙம் தகுதியுடையவனாவான்?"
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக என்பார் அருணகிரி பெருமான். இறைவன் திருவடி நம் மனதில் பதிய வேண்டும் என்றால், மனம் நெகிழ வேண்டும். கல்லின் மேல் எப்படி திருவடி பதியும் ?
இப்படி செய்ய வேண்டியவைகளையே உன் அருளால் செய்கிறேனே. நான் என்ன புண்ணியம் செய்தேன்? இந்த பிறவி எடுத்த பின் பெரிதாய் ஒன்றும் புண்ணியம் செய்து விடவில்லை. இதற்க்கு முன்னால் இருந்த பிறவிகளில் ஏதோ புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும்.

ஒருவனுக்கு இறை பக்தி ஏற்படுவதற்கு அவனது பூர்வ புண்ணியமே காரணம். அது இல்லாதவர்களுக்கு யார் எப்படி கற்றுக்கொடுத்தாலும் கடவுள் பக்தி ஏற்படுவது இல்லை.

 பக்தியால் வாழ்வின் சோதனைகள் பலவற்றை எதிர்கொள்ள முடியும் வாழ்நாள் முழுவதும் பக்தி செய்து இறைவனை வழிபட்டு வருபவர்கள் இறக்கும் தருவாயில் தெய்வீக காட்சிகளையே தரிசனம் செய்வர். அதனால் சிறிதும் அச்சமின்றி, வெள்ளரிப்பழம் தன் கொடியிலிருந்து எவ்வாறு பழத்திற்கு யாதொரு பாதகமின்றி பிரிந்து கொள்கிறதோ, அவ்வாறு பக்குவ நிலையடைந்து இறைவனைச் சென்றடைகின்றனர். 

 பக்தி இல்லாதவர்கள் சாகும் தருவாயில் பல விபரீதமான தோற்றங்களை கண்டு அஞ்சியும் அரற்றியும் பிதற்றியும் துன்புறுகின்றனர்.

புவி ஏழையும் பூத்தவளே - ஏழு உலகையும் பெற்றவளே.

ஒரு பூ மலர்வதைப் போல், இந்த ஏழு உலகங்களையும் மலரவைத்தவளே, என் தாயே என்று கரைகிறார் பட்டர்
நான் நெஞ்சில் கருதியது உன் திருப்புகழே என்றார். '

இப்படித் தம்மால் சிந்திக்க முடிந்தது தமது செயலா? சிந்தித்து பார்க்கிறார் பட்டர். இல்லை. இது அவள் கருணை தான். அவள் கருணை இருப்பதனால் தானே அவளைப் பற்றி சிந்திக்க முடிந்தது? அதனால், இந்த சிந்தனை தமக்கு வரக் காரணம், முன் வினைப் பயனே, அந்த அபிராமியின் அருளே என்று சொல்கிறார் பட்டர். "அவன் அருளாலே அவன் தாள் பணிந்து" என்று சொல்வது போல, அந்த அன்னையின் அருளினாலேதான் அவள் தாள் பணியவும் முடிகிறது என்று உணர்ந்து பாடுகிறார் அவர். இப்படி, என் மேல் கருணை கொண்டு, என்னை ஆண்டு அருளும் தயா பரியே, என் அம்மையே, புவி ஏழினையும் படைத்த தாயே, தயா நிதியே என்று பாடுகிறார்.

இப்படி, அன்னையின் திருவடிகளைத் தாங்கியும், அன்னையின் நாமத்தை விடாது தியானம் செய்தும், அவலது அடியாருடன் கூடி இருந்தும், அவளது ஆகம வழி சென்றும் அவளை வழிபடுவதாக அபிராமி பட்டர் கூறும் இந்த வழிகளில் நாமும் சென்று, அந்த அபிராமி அன்னையின் அருளைப் பெறுவோம்.
அபிராமி சரணம் சரணம்!!



                                                        பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன் 


                                                                                             


                                                           Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                              https://youtu.be/OugF6Mi6JiQ



                                                                    அன்பர்கள் இசைக்கிறார்கள் 


                                                                                            

                                                                Utube  Link for ANDROID  and   IPAD   PHONE  

                                                https://youtu.be/Yx7EP2cZLV0
  


                                                   முருகா சரணம் 

Monday 24 July 2017

அபிராமி அந்தாதி வரிசை ...11


                                                           அபிராமி  அந்தாதி வரிசை ...11

                                                                                       



ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணாரவிந்த தவள நிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே


அன்பரின் விளக்கவுரை 

ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
ஆனந்தமாய் என்று சொல்லி அறிவாய் என்றார். அறிவு - சித்துப்பொருள். பின் நித்தியமாகிய அமுதத்தைச் சொன்னார். அது சத்துப்பொருள். ஆகவே இந்த மூன்றினாலும் அம்பிகை ஆனந்தமாய், சித்தாய், சத்தாய் நிற்பவள். எனவே அவள் சச்சிதானந்த ஸ்வரூபி என்பதும் புலனாகும்.
லலிதா ஸஹஸ்ரநாமத்துல ஸச்சிதானந்த ரூபிணீ - ஸச்சிதாநந்த வடிவானவள்னு சொல்லியிருக்கு அம்பாளை.
தேவி ஆனந்த வடிவினள் என்று தொடங்குகிறார் பட்டர். ஆனந்தம் என்றால் என்ன? பெரும் ஞானியரின் ஆராய்ச்சிக்கு உரியதாக இந்தக் கேள்வி விளங்குகிறது. உணவு ஆனந்தம். தூக்கம் ஆனந்தம். புலன் வழி நுகர்ச்சிகளும் ஆனந்தம்தான். ஆனாலும், எல்லவற்றையும் விடப் பெரிய ஆனந்தம் எது என்ற கேள்வி எழும்போது, எல்லா இன்பங்களுமே சற்று நேரம்தான் என்ற உண்மையும் புரிகிறது. அப்படியனால், எது ஆனந்தம்?
அந்த அபிராமிதான் ஆனந்தம். அவளே ஆனந்த ஸ்வரூபி. அவளே ஆனந்த வடிவினள். ஆனந்தத்தினை எவ்வாறு உணர்கிறோம்? நமது அறிவினால்தானே? அந்த அறிவாகவும் அந்த அம்பிகையே இருந்துவிட்டால்?


திருமூலர் " அறிவார் பராசக்தி ஆனந்தம் என்பர் " ( 1054) என்று கூறியிருப்பதையும் ஒப்பிட்டு மகிழ்வோம். '
 ஆனந்த ரூபமயிலே ' என்பது தாயுமானவர் திருமொழி.
அதுவல்லவோ நமக்கு வேண்டும்!! ஆனந்தமும் அவளே. அந்த ஆனந்தத்தினை அறியும் அறிவும் அவளே. அவளே அமுதமுமாய் இருக்கிறாள். அமுதம் என்பது மரணத்தை நீக்கக்கூடியது. அவளும் அப்படிதான். அவளது ஸ்வரூபமும் நமது மரண பயம் போக்கி, நமக்கு ஆனந்தம் அளிக்கிறது.


புலன்களுக்கு இன்பம் சேர்பவை அறிவுக்கு இன்பம் சேர்பவையாய் இருக்காது. அறிவுக்கு இன்பம் சேர்ப்பவை புலன்களுக்கு இன்பம் சேர்பவையாய் இருக்காது. இரண்டும் சேர்ந்து கிடைப்பது அபூர்வம்.

அமுதம் உடலையும் உயிரையும் இணைப்பது. அதனால் தான் நாம் உண்ணும் உணவுக்கு அமுது என்று பெயர்.
அபிராமி "அமுதமாய்" இருக்கிறாள்.
நஞ்சு உண்ட திருவிளையாடலை, சிவபெருமான் செய்தாலும் அம்மையே அதனை உணடாள் என்றும் சொல்வது உண்டு. சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரி என்ற பகுதியில்,
" விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும், உண்ணாத நஞ்சுண்டிருந்தருள் செய்குவாய் "
அதாவது அமுதம் உண்டாலும் தேவர்களுக்கும் இறப்பு உண்டு. அவர்கள் அஞ்சி நடுங்கிய நஞ்சை தான் உண்டு என்றும் அழிவில்லாதவளாக விளங்குபவள் அன்னை. மேலும் அதிலேயே " நஞ்சுண்டு கறுத்த கண்டி " என்பர்.அம்பிகைதான் அழியாப் பரம்பொருள்.அவள் தான் உண்மையான அமுதம், அவளை உட்கொண்டவர்கள் மரணமிலாப் பெருவாழ்வைப் பெறுவார்கள். 
வான் அந்தம்  ஆன வடிவுடையாள் 
அம்பிகை எப்படிப் பட்ட வடிவு உடையவள்? அவள் அனைத்தினுக்கும் தானே முடிவானவள். அவள் தான் " அந்தம் " அவள் தான் எல்லாவற்றிற்கும் முடிவு என்கிறார் பட்டர்.
பறவைகள் சிறகடித்து பறக்கும் வானம், மழை மேகம் வட்டமிடும் வானம், மின்னல் கோலம் போடும் வானம்...சூரியன், நிலவு, கோள்கள், நட்சத்திரங்கள், பரந்து விரிந்த இந்த பால் வெளி  ....விரிந்து கொண்டே போகும் இந்த வானம் ஒரு அற்புத காட்சி... ஆனால் வானத்துக்கு எல்லையே இல்லை 
அபிராமியின் அழகுக்கு பறந்து விரிந்து அந்த வானம் கூட ஒரு எல்லை இல்லை. எல்லை இல்லாத இந்த பரந்த வெளி கூட அவளின் அழகுக்கு இணை இல்லை.
மறை நான்கினுக்கும் தான் அந்தமான சரணார விந்தம்.



வேதம் நான்கினுக்கும் முடிவாய் விளங்குவது உன் தாமரைத் தாள்கள்


சரணாரவிந்தம் - சரணம் அடையும் பாதங்கள் . விந்தம் என்றால் மூலப்பொருள். நாத விந்து கலாதி நமோ நம என்பது அருணகிரி வாக்கு.
அப்படி பட்ட அபிராமியின் பாதம், சரணார விந்தம், இருக்கும் இடம் எது தெரியுமா ?

தவள நிறக்கானம் தம்  ஆடரங்கு ஆம்  

சுடுகாடு சாம்பல் பூத்து இருக்கும். அதற்கு தவள நிறம் என்று பெயர். அந்த காட்டை நடன அரங்கமாய் கொண்டு நடனம் இடுபவன் சிவன். அந்த சிவனின் தலையில் அவளின் பாதம் இருக்கிறது.
அன்பின் உச்சம்...மனைவி தாயாகத், தெய்வமாகத் தெரியும் அன்பின் உச்சம்.
அன்பின் உச்சம்...கணவன் குழந்தையாகத் தெரியும் பரிவு.
அன்பின் உச்சம் ... நெற்றியில் மட்டும் அல்ல, பாதத்திலும் முத்தமிட தோன்றும்....
"பாகு கனி மொழி மாது குற மகள் பாதம் வருடிய மணவாளா" என்பார் அருணகிரி நாதர். எனக்காக இந்த காடு மேடு எல்லாம் அலைந்தாயா என்று அவளின் குற வள்ளியின் பாதங்களை வருடி விட்டாராம் முருகன்.
நாள் எல்லாம் ஓடி ஆடி களைத்து போன மனைவியின் பாதம் பிடித்துப் பாருங்கள்...அன்பின் இன்னொரு பரிணாமம் தெரியும்....
தவள நிறக்கானம் தம் ஆடரங்காம்

எம்பிரான் மயானத்தில்ஆடுகிறவர். எல்லாம் படுசூரணமாகி எங்கும் சாம்பல் நிரம்பி வெண்ணிறம் பெற்ற காடாகிய சுடலையில் ஆடுகிறவர் அவர். அந்த வெண்ணிறக் காட்டை, தாம் நடனம் ஆடும் அரங்கமாகக் கொண்டவர். எல்லாம் நீறாகி அந்த வெள்ளிய சூழ்நிலையில் ஆடும் நடனத்தைப் பாண்டரங்க நடனம் என்பர்.
உலகம் எல்லாம் அழியினும் தாம் அழியாமல் நிற்பவர் என்பதை அந்த ஆடல் காட்டுகிறது. இத்தகைய பெருமான் இறைவியை வணங்குகிறார்.
இதனையே ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ( 232)
மஹேச்வர மஹாகல்ப மஹாதாண்டவ ஸாஷிணீ
மஹேச்வரனுடைய மஹாப்ரளய காலத்திய மஹாதாண்டவத்திற்கு ஸாஷியாயிருப்பவள்.
( நடனம் : ஆண்கள் - தாண்டவம், பெண்கள் - லாஸ்யம்)
மஹேச்வரன் மஹாதாண்டவம் செய்யும் போது தேவியும் நடனம் செய்வதாகக் கூறப்பட்டிருக்கிறது. இருவரும் நடனம் செய்யும் போது அம்பாளின் வேண்டுகோளின் பேரில் இருவரும் பரம கருணையுடன் லோகங்களைத் திரும்பவும் ஸ்ருஷ்டி செய்வதற்காக அனுக்ரஹம் எனப்படும் ஐந்தாவதுதொழில் தொடங்குகிறது.
மூககவி - " ஹர நடன சாஷீ விஹரதாத் " என்பர்.
தந்தையின் கருணை : உலகினைக் காப்பாற்ற நஞ்சு உண்டது.
தாயின் கருணை : அகிலாண்டமும் தன்னுள் அடக்கி இருக்கும் கணவன் உண்ட நஞ்சை அமுதாக்கியது.
தாய், தந்தையின் கருணை : லோகங்களைத் திரும்பவும் ஸ்ருஷ்டி செய்வது.
அபிராமிபட்டர் தேவியின் சரணார விந்தத்தின் பெருமையை, தன் துணைவன் ( உலகத்தில் எல்லாம் தலைசிறந்து விளங்கும் அழிவற்ற பரமானந்தமான சிவபெருமான்) தன் தலைக்கு மாலையாக அணிந்துள்ளான் என்றுகூறுவது, அவர் அன்னையிடம் கொண்ட பக்திக்கு சிகரமாய் அமைந்துள்ளது.

 ஆதிசங்கரரும், இந்தக் கருத்தினை ஸௌந்தர்ய லஹரீ 86 - வது ஸ்லோகத்தில் ( ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலான மத வைலஷ்ய நமிதம்....)

கவிநயத்துடன் வெகு அழகாகசொல்லியுள்ளார்.
அதாவது அம்பாளிடத்து சரஸம் செய்வதாக எண்ணி அவளுக்குக் கோபம் உண்டாகும்படியாக அவளது பிறந்த் வீட்டினை இகழ்ந்த பரமன், அதனால் கோபம் கொண்ட அம்பிகையை சமாதானம் செய்யும் விதமாக மன்னிப்புக் கேட்டு அவளது பாதங்களில் நமஸ்கரிப்பதாகவும், அப்போது சிவனது நெற்றி அன்னையின் பாதங்களில்பட்டு, அவள்காலில் இருக்கும் பாத சிலம்புகள் ஒலியெழுப்புவதாகவும் சொல்கிறார் பகவத்பாதாள்.


 அம்பிகையின் மலர்பாதங்கள் இறைவன் தலைமேல் இருப்பது சொல்லப்பட்டு இருகிறது. இது தவறா? 


இல்லை இது போல ஜயதேவரும் கீத கோவிந்தத்தில் கண்ணனின் மீது ராதையின் கால்கள் படுவதாக எழுதி விட்டு பிற்கு அடித்துவிட்டார். பின்னர் ஆற்றுக்கு சென்று குளித்துவிட்டு வந்து பார்த்தால் கண்ண்னே வந்து அதே வரிகளை எழுதி விட்டு அது சரியானதே அது தான் தனக்கு பிடித்தது என்று காண்பித்தார். அதுபோல்தான் இதுவும்.


எம்பிரான் முடிக் கண்ணியதே -

 என் தலைவனாம் ஈசன் முடிமேல் அணியும் மாலைகளாகும்.



மற்றும்   "முடிக்கு அண்ணியதே" என்ற கோணத்தில்  
எம்பிரானின் முடிக்கற்றையுடன் அருகில் அம்மையும் ஆடுவாள் எனவும்  கொள்ளலாம் 

அந்தரி பாதம் என் சென்னியதே என்று அன்புடன் உரிமை கொண்டாடுகிறார் அல்லவா! 
பட்டர் சொன்னபடி எம்பெருமாட்டியை, ஆனந்தம் தருபவளை, நிறைந்த அமுதம் தருபவளை நாமும் நமக்கு அதையெல்லாம் அருளுமாறு அபிராமியின் சரணாரவிந்தங்களை பற்றிக் கொள்வோமா!!
அபிராமி சரணம் சரணம்!!


                                                                                 பாடல் இசை வடிவில் 

                                                                                         சாவேரி ராகம் 

                                                                                   குருஜி கற்பிக்கிறார் 


                                                                                                         
                   

                                                                     Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


                                                     https://youtu.be/4-P6FtpC5s8

                                                             
                                                                                  அன்பர்கள் இசைக்கிறார்கள் 


                                                                                                       

                                                                                 
                                                                   Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                                                                                                                                                                                                                                       https://youtu.be/BnUEMgtJ1o0  

                                                                                                                                                                                                                                                       முருகா சரணம் 

Thursday 20 July 2017

அபிராமி அந்தாதி வரிசை ...10 அபிராமி அந்தாதி வரிசை ...10



                                                           அபிராமி  அந்தாதி வரிசை ...10

                                                                                                   



அபிராமி  அந்தாதி - 10
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த்தாள் - எழுதா மறையின்
ஒன்றே, அரும்பொருளே , அருளே , உமையே, இமயத்து
அன்றும் பிறந்தவளே, அழியா முக்தி ஆனந்தமே


அன்பரின் விளக்கவுரை 

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த்தாள் 

நான் நிற்கும் பொழுதும், அமரும் பொழுதும், கிடக்கும் பொழுதும், நடக்கும் பொழுதும், எல்லா நிலைகளிலும் நான் நினைப்பது உன்னைத் தான்.
சதாசர்வ காலமும் அம்பிகையின் திருவுருவை தியானம் செய்யும் ஒரே வேலையைத்தான் செய்கிறார் அபிராமி பட்டர். அவருடைய உடம்புதான் நிற்கிறது, படுக்கிறது, அமர்கிறது, நடக்கிறது. வெளியிலிருந்து பார்த்தால் அவர் நிற்பது போல் தெரியும்.ஆனால் அவர் அம்பிகை தியானத்தில் இருக்கிறார். மற்றவர்களுக்குத்தான் அவர் படுத்து உறங்குவதுபோல் இருக்கும். ஆனால் உண்மையில் அவர் அம்பிகை தியானத்தில் இருக்கிறார்

அப்படி அவர் எல்லாவற்றிலும் அன்னையையே காண்பதால் தான் மன்னர் கேள்வி கேட்ட சமயத்திலும் அன்னையின் ஒளி பொருந்திய முகத்தை தரிசனம் செய்து கொண்டு இருந்ததால் தான் பெளர்ணமி என்று   சொல்லிட்டாரோ ?


 சௌந்தர்ய லஹரி, 27-வது ஸ்லோகத்தில், ஸ்ரீ பகவத்பாதாளும் பாடியிருக்கார்.

ஜபோ ஜல்ப சில்பம், சகலம் அபி முத்ரா விரசனா
கதி: ப்ராதக்ஷிண்ய க்ரமனம், அசன அத்யாஹுத்ய விதி:
ப்ரணாம சம்வேஷ:, சுகம் அகிலம் ஆத்மார்ப்பன த்ருஷா
ஸபர்யா பர்யா: தவ பவது யன்மே விலஸிதம்
அம்பிகையே! எல்லாமே உனக்கு அர்ப்பணம் என்றுஆத்ம சமர்ப்பண பாவனையுடன்நான் பேசும் வெற்றுப் பேச்சு ஜபமாகவும்,என் உடல் அசைவுகள் உன்முத்திரைகளின் விளக்கமாகவும்,நடையெல்லாம் உனக்குச் செய்யும் பிரதட்சிணமாகவும்,நான் புசிப்பதெல்லாம் உனக்குச் செய்யும் ஹோமமாகவும்,நான் கிடப்பது உனக்குச் செய்யும் நமஸ்காரமாகவும்,இம்மாதிரி என் சுகத்திற்காக நான் செய்யும் மற்ற செயல்களும் உனக்குச் செய்யும் பூஜையாக நிறைவேறட்டும்னு பகவத்பாதாளும் சொல்லிருக்கார்.
அதாவது, நமது ஆத்மாவை அம்பாளுக்கு அர்ப்பணம் செய்துவிட்டால், நமக்கு ஜீவன் முக்தி கிடைக்கும். அப்படி செய்வதால், நாம் பேசும் பேச்சு, அம்பாளை வர்ணிக்கும் ஸ்லோகங்களாக கருதப்படும், நாம் என்ன செயல் செய்தாலும், அது அம்பாள் வழிபாடாக மாறும். இவையே ஆத்மநிவேதனம் எனப்படும் 9 வகை பக்தியின் சிறப்பு.
பக்தியின் உச்சநிலையில், பக்தர்கள், தேவியைத் தவிர வேறெதுவும் அவர்கள் கண்ணுக்குப் புலப்படாததால், தாங்கள் செய்யும் அனைத்துச் செயல்களையும், நடப்பது உண்பது படுப்பது உட்பட, அவளுக்கு அர்ப்பணமாகவே செய்கிறார்கள். தன்னுடைய செயல்களும் அம்மாதிரியே ஆக வேண்டுமென, ஆதிசங்கரர் பிரார்த்தனை பண்ணிக்கறார்.
இதையேதான் நம்ம மகாகவியும் பாடியிருக்கார் இப்படி!!
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா .


 " ஸ்ரீமன் நாராயயணீயத்துல " பட்டத்ரீயும் இதே கருத்தத்தான் சொல்லிருக்கார்.
நாராயணீயத்துல 3வது தஸகம்ல 7 வது ஸ்லோகத்துல வருகிறது 

விதூ⁴ய க்லேஸா²ன்மே குரு சரணயுக்³மம்ʼ த்⁴ருʼதரஸம்ʼ
ப⁴வத்க்ஷேத்ரப்ராப்தௌ கரமபி ச தே பூஜனவிதௌ⁴ |
ப⁴வன்மூர்த்யாலோகே நயனமத² தே பாத³துலஸீ
பரிக்⁴ராணே க்⁴ராணம்ʼ ஸ்²ரவணமபி தே சாருசரிதே ||
"ஸ்ரீஅப்பனே!.. என் கால்கள் உமது திருக்கோயில்களுக்குச் செல்லட்டும்.. கைகள் உமக்கு பூஜை செய்வதிலும், கண்கள் உம் திருவுருவை தரிசிப்பதிலும், மூக்கு உமது திருவடிகளில் சமர்ப்பித்த துளசியை முகர்வதிலும், காதுகள் உம் லீலைகளைச் சொல்லும் கதைகளைக் கேட்பதிலும் மட்டுமே ஈடுபடட்டும்.. இவ்வாறு நான் இன்புறுவதற்கு, என் துன்பங்களைப் போக்கி அருள்வாயாக!!".
.
நின்றும் இருந்துங் கிடந்தும் எழுந்தும் நக்கும் அழுதுந் தொழுதும் வாழ்த்தி' என்று திருவாசகத்திலும் பாடப்பட்டுள்ளது 

எழுதா மறையின் ஒன்றே,அரும்பொருளே , அருளே 


 எழுதப்படாத வேதங்களில் ஒன்றி நிற்கும் அரும்பொருளே. 

வேதங்களை வடமொழியில் ஸ்ருதி என்றும் தமிழில் மறை என்றும் கூறுவர் அவை எழுதப் படவில்லை.ஸ்ருதி என்பது ஸ்வர அமைப்புக்ள் மாறாமல் குரு வாயினால் ஓத அதை சிஷ்யன் தன கத்தினாள் கேட்டு மனதில் பதித்துக் கொண்டு பல காலம் ஓதி பயில்வது.இதில் ஒலி தான் மிக முக்கியம்.


தேவியின் இருப்பிடமான ஸ்ரீ நகரத்தின் நான்கு வாயில்களாக  நான்கு வேதங்களும் அமைந்துள்ளன.வேதநாயகியான அம்பிகையால் அருளப்பட்டவை. அந்த வேதங்களின் உட்பொருளாகிய பிரம்ம ஞானமாக விளங்கக் கூடியவள் அம்பிகை.

அரும்பொருளே , அருளே 

அவள் அடையவொண்ணா அரும்பொருள். எல்லாத் தவங்களின் இருதியாய், தவங்களின் பயனாய் அடைவது என்று ஒன்று இருந்தால் அது அவளின் அருளுக்குப் பாத்திரமாவது ஒன்றாகவே இருக்க வேண்டும். அவளின் அருள் மட்டுமே நமக்கு வேண்டும். 
அவள், அருட்கடல். எது கேட்டாலும் தந்து விடுவாள். நமக்கு அது சரிப்படுமோ, படாதோ, தந்து விடுவாள். 
அதே போல்தான், அந்த அபிராமியிடம் வேண்டுவதும். எது கேட்டாலும் கொடுத்து விடுவாள். ஆனால், அவளிடல் ஏதும் கேட்காமல் இருப்பதே உத்தமம். அவளையே கேட்பதுதான் சிறந்தது. அவள் அருகிலேயே, அவள் அடியிலேயே இருந்து விட்டால், வேறு என்ன வேண்டும் 
உமையே 

'உமையே' என்ற சொல்லிலும் ஒரு கிளைக்கருத்து இருக்கிறது. உமா என்ற சொல்லுக்கு ஒளி என்று பொருள். உமா என்பதற்கு, 'பெண்ணே வேண்டாம்' என்றும் பொருள் உண்டாம்.
பார்வதியாகப் பிறந்த சக்தி, கரிய நிறத்தவளாக இருந்தாளாம். சிவன் பார்வதியை 'கரிக்குஞ்சு' என்று கிண்டல் செய்ய, பார்வதி கோபம் கொண்டு சிவனை விலகினாளாம். பதிலுக்கு ஏதாவது சிவனைக் கிண்டல் செய்து விட்டுப் போகக்கூடாதோ? தன்னுடைய நிறத்தை மாற்றக் கடுந்தவம் செய்யப் போனாளாம். 'வேண்டாம், கடுமையான தவம் மேற்கொள்ளாதே' என்று பார்வதியை அவளுடைய தாய் தடுத்ததாகப் புராணக் கதை. (உ, மா: பெண்ணே, வேண்டாம்!).
உமா என்ற சொல்லுக்கு ஒளினும் சொன்னோம் இல்லையா!!
திதியைத் தவறாகச் சொல்லிவிட்டு, உயிர் பிழைக்க பட்டர் அந்தாதி பாடியது அமாவாசையன்று இல்லியா, அமாவாசை பௌர்ணமியாக என்ன தேவை? ஒளி இல்லையா? அதனால் தான் பட்டர் அபிராயிய உமயேன்னு பாடறார்.

 இமயத்துஅன்றும் பிறந்தவளே 

இமாசலத்தில் அன்னை பார்வதியாய் திரு அவதாரம் செய்தவளே.


அழியா முக்தி ஆனந்தமே

அதுவும், எப்படிப் பட்ட ஆனந்தம்? அழியாத முக்தி ஆனந்தம். ஒரு பொழுதும் வற்றாத ஆனந்தம். வேறு ஏது சிந்தனையும் இன்றி அவளையே நினைத்து இருக்கும் பேறு நமக்கு வாய்த்து விட்டால், வேறு என்ன வேண்டும் நமக்கு?
முத்தி - என்பது விடுதலை - பந்தபாசங்களினின்றும், மாயை, பிறப்பு இறப்பு - அது ஆனந்தமானது. இதையே பேராந்தம், பிரம்மானந்தம், சிவானந்தம், ஆத்மானந்தம், சச்சிதானந்தம் என்றெல்லாம் கூறுவர்.
லலிதா சகஸ்ரநாமத்திலும் வருகிறது;
'முக்தி ரூபிணி' அப்படின்னு வர்ணிக்கப்பட்டிருக்கிறாள்.
முக்தி ரூபிணீ - முக்தியையே ரூபமாக உடையவள்
முகுந்தா - முக்தி அளிப்பவள். முகு : என்றால் மோட்சம். அதைத் தருபவள்.
முக்தி நிலையா - முக்தியின் இருப்பிடம்.
முக்திதா - தன் பக்தர்களுக்கு அன்னை முக்தியை அளிப்பவள்..

அவள் என்றும் அழியாத சாயுஜ்ய பதவியைத் தருபவள். சாயுஜ்ய முக்தி அடைந்தோர் அழியாத முக்தி ஆனந்தம் பெற்றவர்கள். ' ஆனந்தமே ' என்று இப்பாடலை முடிக்கிறார் பட்டர். 

அபிராமி சரணம் சரணம்!!

                                                                                 பாடல் இசை வடிவில் 

                                                                                   குருஜி கற்பிக்கிறார் 

                                                                                                       




                                                               Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


                                                                    https://youtu.be/_1KOPzByh4U
                                                                

                                                                                  அன்பர்கள் இசைக்கிறார்கள் 

                                                                                                          


                                                                      Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


                                                                            https://youtu.be/fE2h2IRc3lU

                                                                                       முருகா சரணம் 

Tuesday 18 July 2017

புதிய வரிசை எண் 488 வழிபாடு புத்தக வரிசை எண் 154





                               குரு மஹிமை இசை புதிதாக சேர்க்கப்பட்ட பாடல்கள் (476--503)


                                                   புதிய வரிசை எண்  488   வழிபாடு புத்தக எண்  வரிசை  154 

                                                                                         
                                                          "சரியையாளர்க்கும் "என்று தொடங்கும் பாடல் 
                                                                                       வசந்தா ராகம் 
                                                                             பாடலின் பொருளுக்கு 

                                                http://thiruppugazhamirutham.blogspot.in/2012/11/154.html

கதிர்காமம் திருத்தலம் 

கதிர்காமம் கோயில்  இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம். இலங்கையின் சில சமயத் தளங்களில் ஒன்றான இது, சிங்களவர்பௌத்தம்சோனகர்தமிழர், மற்றும் இலங்கை வேடுவர் போன்ற சமுதாயத்தைச் சார்ந்த மக்களால் போற்றப்படுகிறது.

கதிர்காம கந்தனின் பெயர் தமிழ் சமசுகிருத மொழிகளில் உள்ளன. அவையெல்லாம் அவனின் குணாதிசயங்கள், லீலைகள். வீரதீரச் செயல்களை வெளிப்படுத்தும் பெயர்களாகும். இக்கோயிலில் அருள்பாலிக்கும் கந்தனை வழிபடச் செல்வதை கதிர்காம யாத்திரை என்பர். கிட்டதட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மன்னனான எல்லாளனுடனான போரில், சிங்கள மன்னனான துட்டைகைமுனு இக்கோயிலில் நேர்த்திக்கடன் வைத்ததாகவும், போரில் வென்ற பின்னர், இக்கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவேற்றியதாகவும் மகாவம்சம்நூலில் குறிப்புகள் உள்ளன. 



கோயில் அமைப்பு


ஏழுமலைகளில் ஒன்றின் மீது கதிர்காம கந்தனின் காட்சி கொடுத்ததின் ஞாபகார்த்தமாகவும் மாணிக்க கங்கையின் இடது கரையோரத்தில் வள்ளியை மணம் புரிந்ததைக் குறிக்கு முகமாகவும் கதிர்காமக்கோயில் அவன் பெயரில் கட்டப்பட்டது. முக்கால் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கோயில் சுற்றுமதில் 6 அடி உயரத்தில் செங்கட்டியால் கட்டப்பட்டுள்ளது. சதுரவடிவிலுள்ள கோயில் வீதியில் சிறிய கோயில்கள் உள்ளன. கதிர்காம கந்தனின் அண்ணன் கணபதிக்கும் மூத்த மனைவி தெய்வயானைக்கும் தனித்தனி கோயில்கள் உள்ளன. ஞான சொரூபியான பிள்ளையார் கோயிலுக்கு பக்கத்தில் அழகும் பொலிவுங் கொண்ட அரசமரமுண்டு. இவ்வரசு புத்தருக்கும் விஷ்ணுவுக்கும் புனிதமானது. மகாதேவாலயத்திற்கு இருவாசல்கள் உள்ளன. தெற்கேயுள்ள பிரதான வாசல் வில்போன்று வளைந்த அலங்கார முகப்பைக் கொண்டது. பக்கத்தே சிறு கதவுண்டு. தேவாலயத்திற்கு எதிரே கந்தனின் இரண்டாவது மனைவி வள்ளியம்மாவின் கோயில், இக்கோயிலுக்கு இட்டுச்செல்லும் வழி 300 யார் நீளமும் 20 யார் அகலமும் உடையது.

கருவறையின் சிறப்பு
ஆதிமூல அறைக்குள் பக்தர்கள் செல்ல முடியாது. திரையால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இது பரமரகசியமான புனிதத்துவம்மிக்க இடம். காற்றோ, வெளிச்சமோ உட்புகாதமுறையில் சாளரமோ, துவாரங்களோ இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இவ்வறைக்கும் மத்திய அறைக்குமிடையே சிறுகதவுண்டு. யாரும் இங்கே செல்லமுடியாது. பூசகர் மட்டும் பக்தி சிரத்தையுடன் செல்வார். பக்தர்கள் தத்தம் காணிக்கைகளை செலுத்துவதற்கு மத்திய அறைக்கு அப்பால் செல்லமுடியாது


வருடாந்தரப் பெருவிழா

பிரசித்தி பெற்ற கதிர்காம வருடாந்த பெருவிழாவின் போது, தாமிரத்திலோ தங்கத்தட்டிலோ எழுதப்பட்ட பரமரகசியமான மந்திர சக்திவாய்ந்த யந்திரத்தைக்கொண்ட வெண்துகிலால் மூடிய பேழையை யானை சுமந்து ஊர்வலம் வரும். விவரிக்க முடியாத சூட்சுமசக்தி எங்கும் நிலவுகிறது. பக்திமேலீட்டினால் சிலர் விழிநீர்மல்கப்பாடி ஆடுகின்றனர். இன்னும் சிலர் உருண்டும் புரண்டும் உடலை வாட்டி வதைத்துத் தம்பாவங்களுக்கெல்லாம் கழுவாய் தேடுகின்றனர்.வருடாந்தப் பெருவிழா தீர்த்தத் திருவிழாவுடன் முடிவுறும். வானசாத்திரத்தையொட்டி மிக நுண்ணிய முறையில் கணிக்கப்பட்ட பூரணையன்று கந்தன் தீர்த்தமாடுவான். மாணிக்கங்கையாற்றின் நீர் பரப்பில் பூசையில் வைக்கப்பட்ட வாளினாலோ அல்லது களியினாலே வட்டமிட்டு தண்ணீரை வெட்டுவார்.

பிற விழாக்கள்

ஆடித்திருவிழா ஆடி அமாவாசையில் தொடங்கி முழு நிலவு முடிய நடைபெறும். இதுபோன்றே கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்ப்புத்தாண்டு பிறப்பு, தை மாதப்பிறப்பு, மாசிமகம், வைகாசி விசாகம் போன்ற நாட்களிலும் சிறப்பாக விழா எடுக்கப்பட்டுவருகின்றன. 
அருணகிரிநாதர் இத்தலத்தினை வணங்கி வழிபட்டு 25க்கும் மேற்பட்ட திருப்புகழ் மாலைகளைப் பாடியுள்ளார் .

                                                                                                   பாடல் 

                                                                    17.10.2010 விஜய தசமி வழிபாடு 

                                                                                                         

                                             Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


                                                                       https://youtu.be/-x976Ueo8ok


                                                                                                அன்பர்கள்



                                                                                                     

                                             Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                                                https://youtu.be/GES01pmGybk


                                                                              ஒரு வழிபாட்டின்  பகுதி


                                                                                                     

                                                Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                                                          https://youtu.be/p7zvag5Wwus


நம் குருஜியை எப்பொழுதும்  ஆனந்தப் பட வைக்கும் ஒரே விஷயம் நாம் பாடல்களை அவர் எதிர்பார்த்த வண்ணம் கற்றுக்கொண்டு இசைப்பது தான்.

குருஜியின் வகுப்புகளில் பயின்றவர்கள் மஹா  பாக்கியசாலிகள் ஒரு .டெல்லி வகுப்பில் அன்பர்கள் அப்படி கற்று இசைத்த பின் நம் குருஜி அடையும் குதூகலத்தை நாமும் வகுப்பில் கலந்து  கொண்டு அனுபவிப்போம்.

Link 
                                                  முருகா சரணம்