Thursday 3 August 2017

அபிராமி அந்தாதி வரிசை 13


                                                             அபிராமி அந்தாதி  வரிசை  13   
                                                                                                     


பூத்தவளே! புவனம் பதினான் கையும் பூத்தவண்ணம்
காத்தவளே! பின் கரந்தவளே! கறைக்கண்டனுக்கு
மூத்தவளே! என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே! உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே?


அன்பரின் விளக்கவுரை 

பூத்தவளே! புவனம் பதினான் கையும் பூத்தவண்ணம்
காத்தவளே! 
இந்த உலகத்தை ஒரு மலர் மலர்வது போல மிக மென்மையாக அபிராமி படைத்தாளாம்.சரி, படைத்தாகி விட்டது. அத்தனை உயிர்களையும் காக்க வேண்டும் அல்லவா. எப்படி மென்மையாக படைத்தாளோ, அதே போல் அனைத்து உயிர்களையும் காக்கின்றாள்.
பராசக்தி பதினான்கு உலகங்களையும் பூத்திடச் செய்தவள் மட்டுமல்ல.
அந்தப் பதினான்கு உலகங்களாகவும் அவளே பூத்து நிற்கிறாள்.பூத்ததுடன்
நில்லாமல்.சின்னஞ்சிறிய புல்பூண்டுகளில் இருந்து பெரிய பெரிய கோள்கள் வரை அவை எந்த நோக்கத்துக்காக உருவாயினவோ அந்த நோக்கம்குன்றாமல் இயங்கவும் அவளே அருள்கிறாள்.

முன்பு, 'புவி ஏழையும் பூத்தவள்’ என்று முடித்தவர் இப்போது புவனம் பதினன்கையும் என்கிறார்.
புவி வேறு புவனம் வேறா?

“புவி, புவனம் என்பவை வேறு வேறு தான். பிரபஞ்சத்தில் ஏழு புவிகள் உள்ளன. அவற்றையெல்லாம் உள்ளடக்கி விரிந்த புவனங்கள் பதினான்கு உள்ளன. இதைப் போன்ற எண்ணிலடங்கா கோடானு கோடி உலகங்களை அம்பிகை கண்மூடி கண் திறக்கும் நொடிப்பொழுதில் சிருஷ்டி செய்து, காப்பாற்றி பின் அழிக்கவும் செய்கிறாள்.
புவி ஏழு என்று கூறக்கூடிய ஸ்ப்ததீபங்கள் ஜம்பு, பிலக்ஷ, குந, கிரளெஞ்ச, சாக, சான்மல மற்றும் புஷ்கர எனும் ஏழு தீவுகளாகும். 

புவனம் பதினான்கு யாதெனில் கீழ் ஏழு லோகங்களாகிய அதலம், விதலம், சுதலம், தார்தலம், மஹாதலம், ரசாதலம் மற்றும் பாதாளம் ஆகியவையும், மேல் ஏழு லோகங்களாகிய பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், ஜனலோகம், தபோலோகம், மஹாலோகம் மற்றும் சத்திய லோகம் ஆகியன ஆகும்.”
எனவே தான் 'உன்மேஷ நிமிஷோத்பன்ன புவானாவல்லி” என்று லலிதா சஹஸ்ரநாமம் போற்றுகிறது!”
உந்மேஷம் என்றால் கண்களை திறத்தல், நிமேஷம் என்றால் கண்களை மூடுதல், புவனாவளி என்பது வரிசையான பல உலகங்கள். அதாவது, அன்னை தனது கண்களைத் திறந்து-மூடுவதன் மூலம் உலகங்களைப் படைத்தும் அழித்தும் வருகிறாள் என்பது.
திருமூலரும் திருமந்திரத்தில் ( 1074) ' தானே தலைவியென நின்ற தற்பரை " என்ற பாடலில் அன்னையே பதினான்கு உலகங்களையும் படைத்தவள் என்பார்.
சௌந்தர்யலஹரியில் இந்தக் கருத்து வருகிறது. சக்தி கண்ணசைத்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் படைத்தல் காத்தல் அழித்தல் எனும் முத்தொழிலையும் தொடங்குவார்களாம். சக்தி மறுபடி கண்ணசைத்தால் நிறுத்துவார்களாம். அதனால் சக்தியை விடச் சிறந்த தெய்வம் வேறு இல்லை என்ற கருத்தில் சௌந்தர்யலஹரில பகவத்பாதாளும் பாடியிருக்கா.
ஓ பகவதீ! பிரும்மா மிக ஸ்வல்பமான உமது பாதாரவிந்த தூளியை வைத்துக் கொண்டு தனித்தனியாக 14 லோகங்களையும் படைக்கிறார். விஷ்ணுவும் அப்படியே ஆயிரம் தலைகளால் அதை வஹ’க்கிறார். ஹரனும் உலகைக் கொளுத்தி, சாம்பலால் விபூதியாக அணிகிறார்."

கரந்தவளே' என்ற பதத்திற்கு, 'மறைத்து வைத்தல்' என்பதே பொருள்.

'பின் கரந்தவளே' என்பதற்கு இன்னுமொரு அர்த்தமும் வருகிறது. 'கரந்து' என்பதற்கு 'சக்தியாக மறைந்திருத்தல்' என்ற பொருளும் உண்டு. அன்னை பதிநான்கு உலகைப் படைத்து, காத்து வந்தாலும், அதன் சக்தியாக மறைந்து இருப்பதை பட்டர் எடுத்துக் காட்டுகிறார் இங்கு. மற்ற (மேல்) உலகங்களை நம் (அகக்)கண்களிலிருந்து மறைத்து இருக்கிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.


பதினான்கு லோகங்களையும் பூத்தவள் அவள். பின்னர், அவற்றைக் காப்பவளும் அவளே. பின்னர், அவற்றை, மறைத்து விடுபவளும் அவளே. இங்கே, அவள் அவற்றை, அழிப்பது இல்லையாம். அன்பினால், அருளினால், மெதுவே, மறைத்து மட்டுமே வைக்கிறாளாம்!

இதையே ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் ; 270. திரோதானகரீ : ( எல்லாவற்றையும்) மறையச் செய்பவள்.
வீட்டில் விசேஷம் என்றால் அம்மா பல பலகாரங்கள் செய்வாள். குழந்தை அது வேண்டும் , இது வேண்டும் என்று கேட்கும். தாய் பார்த்துக் கொண்டே இருப்பாள். அளவுக்கு மேலே போனால், பலகாரங்களை எடுத்து உள்ளே வைத்து விடுவாள். "காலியா போச்சு, நாளைக்குத் தருகிறேன் " என்று மறைத்து வைத்து விடுவாள். குழந்தை அழும். அம்மாவுக்குத் தெரியும், அழுதாலும் தர மாட்டாள். குழந்தையின் மேல் உள்ள அன்பால், அதுக்கு ஒரு தீங்கு வந்து விடக் கூடாதே என்று நினைத்து அந்த ருசியான பலகாரங்களை மறைத்து வைப்பாள்.
அபிராமியும் அப்படித்தான். நமக்குத் தராமல் சிலவற்றை மறைத்து வைக்கிறாள் என்றால் ஏதோ காரணம் இருக்கும்.

'கறைக் கண்டனுக்கு மூத்த வளே'


 இந்தக் கதை அனேகமாக, எல்லோருக்கும் தெரிந்திருக்கும். முன்னொரு நாள், தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்திற்காக பாற்கடலைக் கடைதபோது, முதலில் வெளிப்பட்டதென்ன்வோ, ஆலகால விஷம்தான். அதனிடமிருந்து தப்புவ்பதற்கு வழி தெரியாமல் தேவர்கள் விழித்தபோது, நான் இருக்கிறேன் என்று அபயம் அளித்து, அந்த ஆலகால விஷத்தினை விழுங்கி அருள் செய்தது ஈசந்தான். ஆனால், அப்படி விழுங்கிய விஷம் ஈசனையே பாதித்த போது, ஈசனின் கழுத்திலே, அவன் கண்டத்திலே கை வைத்து, அந்த விஷம் பரவாமல் தடுத்து ஆட்கொண்டாள் அம்பிகை. அந்த விஷம் கழுத்துடன், 'கண்டத்துடன்' தங்கியதால், கண்டம் நீல நிறமாயிற்று. கறை படிந்தது போல் ஆயிற்று

மூத்த வளே'

இது எப்படி சரியாகும்? அனைத்துக்கும் ஆதியானவன் பரமசிவனல்லவா? சிவத்துக்கும் மூத்தது ஒன்று அண்ட சராசரத்திலும் உண்டோ?”

இது ஒரு பிரம்ம ரகசியம். சிவமும், சக்தியும் ஒன்றேதான்; வேறு வேறு அல்ல. சலனமற்றிருக்கும் போது சிவமாகவும், சலனித்து பிரபஞ்சம்
உண்டாகும் போது சக்தியாகவும் மாறும்.சிவமில்லையெனில் சக்தி இல்லை; சக்தி இல்லையெனில் சிவமில்லை. சிவசக்தி இல்லையெனில் எதுவுமே இல்லை!
சக்தி தத்துவத்தில் இருந்தே சதாசிவ தத்துவம் தோன்றியதால் இங்கே அம்பிகையை மூத்தவள் என்கிறார். இன்னும் தெளிவாய்ச் சொல்லப் போனால் அம்பிகையில் மும்மூர்த்திகளும் அடக்கம். ஆகவே அம்பிகையைப் பூஜித்தால் மும்மூர்த்திகளையும் பூஜித்ததாகும் என்பதே இந்த ஸ்லோகத்தின் மையக் கருத்து. இதையே லலிதா சஹஸ்ரநாமம்,
"ஸ்ருஷ்டி கர்த்ரீ ப்ரஹ்மரூபா கோப்த்ரீ கோவிந்த ரூபிணீ
சம்ஹாரிணீ ருத்ரரூபா திரோதானகரீ ஈஸ்வரீ
ஸதாசிவா அனுக்ரஹதா பஞ்சக்ருத்ய-பராயணா! ன்னு சொல்லிருக்கு.


மூவா முகுந்தற்கு இளையவளே!!

இந்த இடத்துல என்றும் ஆனந்தமளிக்கும் திருநாமத்தைக் கொண்ட கண்ணபிரானை நினைவூட்டுகிறார். ஊழிக்காலத்து உலகம் அழியும் வேளையில் கண்ணபிரான் சிறு குழந்தையாக ஆலிலையில் மிதந்து வருவார்
என்பது வைணவர்களின் நம்பிக்கை... எனவே என்றென்றும் இளமையாகத் தோற்றமளிக்கும் முகுந்தனுக்கு மலைமகள் தங்கைமுறையாவாள்... எனவேதான் என்றும் மூப்பெய்தாத முகுந்தனுக்கு இளையவளே... என்று விளிக்கின்றார்..


திருமாலுக்கு அம்பிகை தங்கையானவள். இதே கருத்தைப் பின்னர் அபிராமபட்டர் செங்கண் மால் திருத் தங்கச்சியே' பாடல் 50. என்று குறிப்பிடக் காணலாம். " 

பத்மநாப சகோதரி " ( 280) என்பது ஸகஸ்ரநாமாவில் ஒன்று. மூவா முகுந்தன் என்பதனால் திருமால் இளமை குன்றாத அழகன் என்றாயிற்று. அண்ணண் ' மூவா ' என்ற அடைமொழி பெற்று சிறப்பிக்கப் பெற்றார். இளையவளான அவ் அண்ணணிண் தங்கையும் இளமை மாறாதவள் என்றாயிற்று. 

ஆதிவித மிகுத்த தண் தந்த மால் தங்கை ( 1069) என்பார் திருமூலர். குளிர்ந்த நீர்ப் பகுதியில் உள்ள திருமாலின் தங்கை நாராயணி என்பது பொருள்.

மா   (த் )  தவளே     (தவம் புரிந்தவளே )

எம்பெருமாட்டி, பார்வதியாக அவதரித்த போது பரமேசுவரனைத் திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு தவம் புரிந்தாள் அல்லவா! அம்பிகை தவம் புரிந்தால் அது மாபெருந் தவமாகவே இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா?

உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே!

எல்லாத் தெய்வங்களுக்கும் மேலான தெய்வமாக அன்னை அபிராமி இருக்க வேறு ஒரு தெய்வத்தை வணங்க வேண்டிய அவசியம் இல்லையே. மேல் படியை அடைந்தவனுக்கு கீழ்ப்படிகளில் கால் வைக்கும் அவசியம் இராதுன்னு சொல்றார்.
அவ்ளே முத்தொழிலும் செய்வதால், மூன்று சக்தியுமாய் ஆகி நின்றதால், தாமரை மலரில் உறையும் லஷ்மியும் அவள்தான்! இன்னொரு தாமரை மலரில் உறையும் சரஸ்வதியும் அவள்தான்.இப்படி எல்லாத் தெய்வமுமாய் அவள் இருக்கும்போது, வேறொரு தெய்வத்தினை நினைப்பதும் உண்டோ? இல்லை என்று சொல்கிறார் பட்டர்.
அபிராமி சரணம் சரணம்!!


                                                  பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன் 


            


                                                         Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                                                            https://youtu.be/oKmXE5DcqdI

  
                                                           அன்பர்கள் இசைக்கிறார்கள் 


                                                                                                                                                                              


                                                          Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


                                                                     https://youtu.be/Ulr17CzSqw4   

                                                 முருகா சரணம் 

                          

No comments:

Post a Comment