Wednesday 16 August 2017

அபிராமி அந்தாதி - 14 அபிராமி அந்தாதி - 14


                                                                        அபிராமி அந்தாதி - 14
                                                                                                     


வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்;
சிந்திப்பவர், நல்திசைமுகர் நாரணர்; சிந்தையுள்ளே
பந்திப்பவர், அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி! நின் தண்ணளியே:


அன்பரின் விளக்கவுரை 

விண்ணுலகம் வாழும் தேவர்களும், அசுரர்களும் என்றும் உன்னை வணங்கியபடியே இருக்கின்றனர். கமலத்திலமர்ந்த வேதப்பரம்பொருள் நான்முகனும், அவதார நாயகன் நாராயணனும் என்றும் உன்னை சிந்தித்தபடியே இருக்கின்றனர். அழியாத ஆனந்தமளிக்கும் பரம்பொருள் சர்வேஸ்வரன் தனது தூய அன்பால் என்றும் உன்னைக் கட்டி போட்டபடி இருக்கின்றார். 

ஆனாலும் இவர்களைக் காட்டிலும் இந்த பூவுலகில் உம் திருவடி பணிவோர்க்கு மட்டும் என்றும் உன் கருணையும் அருளும் எளிதாகக் கிடைக்கின்றது. எம் தலைவியே இது மிகவும் வியப்பிற்குரிய ஒன்றாகும்.

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்" 

 பக்தர்க்குத் தண்ணளி வழங்கும் அபிராமியை, வானவர்களும், தானவர்களாகிய அசுரர்களும் வழிபடுகின்றார்கள். காச்சிப முனிவருக்குத் தநு என்னும் பெண்ணின் வழியாகத் தோன்றியவர்கள் அசுரர்களாகிய தானவ ர்கள்.வானவர்க்கு என்று ஒரு பண்பு உண்டு. தானவர்க்கு என்று ஒரு பண்பு உண்டு. அவ்வந்த பண்புகளாக ஆனவர்கள் என்பதால் வானவர், தானவர் ஆனவர்கள் என்றார் .

" சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே"
 சிந்தித்தல் என்பதற்கு மனனம் செய்தல் என்பது பொருள். திசைமுகர் என்னும் பிரம்மாவும், திருமாலும் தம் உள்ளத்துள் வைத்து சிந்தனை செய்கிறார்கள். 

"சிந்தையுள்ளே பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்" ;

 பரமசிவனார் மேற்கொண்ட யோக நெறியை இவ்வாறு குறித்தார் பக்தர். சிவன் தன் உள்ளத்தில் பார்வதியை யோகத்தால் பிணைப்பவர்: அதனால் பரம ஆனந்தம் பெற்றவர்ஆனார். ' பந்தித்தல் ' என்றால் கட்டுதல், பிணைத்தல், சேர்த்தல் என்று பொருள்; அம்மையைச் சிவபெருமான் தம் மனத்துள் பந்திக்கும் பரமானந்ந்தர் 'ஆகிறார்.எனவே அம்பிகையின் முதல் உபாசகர் சிவபெருமானே ஆவார்.

பிரமதேவர் தன் த்யானமூர்த்தி வந்துவிட்டாள் என்று குழைத்து வணங்குகிறார். நாராயணரோ அவள் அருளுக்கு ஏங்கி நிற்கிறார். சிவபெருமான் அவளுடைய அந்தரங்கத்தை நாடித் தவம் கடக்கிறார். வானவர் ணங்குகின்றார்கள். தானவர் வந்திருக்கின்றனர். " வந்தடி போற்றுவர் வானவர் தானவர்" ( திருமந்திரம் 1242)
லலிதா ஸஹஸ்ரநாமத்துல 64. தேவர்ஷிகண ஸங்காத ஸ்தூயமானாத்ம வைபவா.
தேவர்கள், ரிஷிகள் இவர்களுடைய கூட்டங்களால் ஸ்தோத்ரம் செய்யப்பட்ட வைபவத்தோடு கூடியவள். 297. ஹரிப்ரஹ்மேந்த்ர ஸேவிதா - விஷ்ணு, ப்ரம்மா, இந்திரன்முதலியவர்களால் வணங்கப்பட்டவள்.
ஸ்ரீ லலிதா த்ரீசதியில்

105. ஹராராத்யா - சிவனால் ஆராதிக்கப்பட்டவள்.
106. ஹரிப்ரமேந்த்ர வந்திதா - ஹரியாலும் பிரம்மா வினாலும், இந்திரனாலும் பூஜீக்கப்பட்டவள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.


குமரகுருபர முனிவரும், " எறிதரங்கம் உடுக்கும் புவனம் கடந்து நின்ற ஒருவன் திருவுள்ளத்தில் அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஓவியமே!" என்று பாடுகிறார்.


ஆதிசங்கரரும், ஸௌந்தர்ய லஹரீயில் " முகுந்தப்ரஹ்மேந்த்ர" ( 22) " தநீயாம்ஸம் பாம்ஸும் " ( 2 ) என்ற ஸ்லோகங்களில் இந்த கருத்தினை தெரிவிக்கிறார்.
869. ஷிப்ர ப்ராதினீ - சீக்கிரமே அனுக்ரஹம் செய்பவள்.
992. அவ்யாஜ கருணாமூர்த்தி - பஷபாதமில்லாத கருணை உருவம்.

பாரில் உன்னைச்சந்திப்பவர்க்கு எளிதாம் 
 இந்தப்பாரில் தன்னை சந்தித்துத் தரிசனம் செய்யும் அடியவர்களுக்கு எளியவளாக இருந்து தண்ணளி செய்கிறாள். என்னே அவள் கருணை.
அன்னையின் கருணையைக் கண்ட அடியார்கள். கருணாதரங்கிதாஷிம், கருணாரஸஸாகரா, கருணாம்ருத ஸாகரா, காருண்ய விக்ரஹா என்கிறார்கள்.
590. கடாஷகிங்கரீ பூத கமலா கோடி ஸேவிதா

அந்த அம்பாளின் கடைக்கண் பார்வை ஒரு பக்தன் மேல் விழுந்து விட்டால், கோடிக்கணக்கான லஷ்மிகளும் அவனுக்குப் பணிவிடை செய்து விடுவார்கள். எல்லா ஸௌபாக்யங்களையும் அவன் பெறுவான் என்று சொல்லாமல் சொல்லப்படுகிறது. 


அம்பாளுடைய கடாஷத்தின் மஹிமை மூக பஞ்ச சதியில் கடாஷ சதகத்தில் காவ்யரஸனையுடன் சொல்லப்படுகின்றது.

'ஆபால கோபல விதிதாதைய நம:' என்று லலிதா சகஸ்ரநாமத்தில் ஒரு ஸ்லோகம் இருக்கிறது. குழந்தை உள்ளத்துடன் தன்னைத் தேடும் பக்தர்களுக்கு அம்பிகை உடனே அருள்புரிவாள் என்பது இதன் பொருள். அம்பாளைக் காண பெரிய வழிபாடுகளோ, தவமோ, யோகமோ தேவையில்லை. பூரண சரணாகதி ஒன்றே போதும்.

அம்பிகையே எளிமையானவள்: சௌலப்பியம் மிக்கவள்: எளியவர்க்கும்எளியவள்: யார் கோவிலுக்குச் சென்று அவளது அர்ச்சாமூர்த்தைத்தை வணங்கினாலும், ' எளிதாகும் தண்ணளி' யாள் அவள்,   


                                                           பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன் 


                                                                                                         



                                                        Utube  Link for ANDROID  and   IPAD   PHONE

                                             https://youtu.be/WsfUP8xwTF8



                                                                                                                 


                                                      Utube  Link for ANDROID  and   IPAD   PHONE


                                            https://youtu.be/Hs1rnVOhqk0



                                                                             முருகா சரணம்                                                        

No comments:

Post a Comment