Tuesday 17 October 2017

அபிராமி அந்தாதி - 22



                                                                               அபிராமி அந்தாதி - 22


               அன்பர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த  தீபாவளி நல் வாழ்த்துக்கள் 

                                                                                              



கொடியே! இளவஞ்சிக் கொம்பே! எனக்கு வம்பே பழுத்த
படியே! மறையின் பரிமளமே! பனிமால் இமயப்
பிடியே, பிரமன் முதலான தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே!



அன்பர் தொகுத்து அளித்துள்ள விளக்கவுரை 


கொடியே' இளவஞ்சிக் கொம்பே! 
அன்னை  கொடி போல் இருக்கிறாள். மென்மையே உருவெடுத்தாற்போல் இருக்கிறாள். இளவஞ்சிக் கொம்பு போல் இருக்கிறாள். அந்தக் கொடியிலே என்ன பழம் கிடைக்கும்? 'அருள்' என்ற பழம் கிடைக்கும். அந்த அருளானது,
அன்னையை கொடியாகவும், கொம்பாகவும் சொல்வது மிகச் சிறப்பு. கொடி ஒரு சிறு காற்றுக்கும் ஆடக்கூடியது. அதாவது அன்பர்களுக்கு ஒரு சிறிய துன்பம் ஏற்பட்டாலும், அதைப் போக்க அவள் ஓடி வருவாளாம்.

அம்பிகை கொடியாகவும், கொம்பாகவும் ஆன வரலாற்றைக் கேட்கலாமா!!
சிவபெருமானும், சக்தியும் ஒன்றிணைவதும் பிறகு மீண்டும் பிரிவதும் இப்பிரபஞ்சத்தின் தோற்றமும், ஒடுக்கமுமாகும். ஒருமுறை சிவத்தைப் பிரிந்த சக்தி, நாகவடிவில் சிவனைக் கூட முயன்றாள். நாகத்துடன் கூட புற்று தான் சிறந்தது. ஆனால் சிவன் நதியாய் மாறி ஓடினார். சக்தி மீன்வடிவம் தாங்கி நதியுள் துள்ளி விழ சிவபெருமான் சேறாகி நின்றார். சேற்றில் பூக்கும் தாமரையாய் அம்பிகை உருமாற, சிவன் மரமாக மாறினார். அம்பாள் அதில் மலராகப் பூக்க, சிவன் ஒரு கொம்பாகி மண்ணில் ஊன்றி நின்றார்.
உடனே அம்பிகை, “பெருமானே! அனைத்தும் தாங்களே! எவ்வடிவம் எடுத்தாலும் உம்மை அடைவது எனக்கு பெருமை. இதை மாற்றவோ தடுக்கவோ
தாங்களே நினைத்தாலும் நடக்காது. பின்பு ஏன் இந்த லீலை? நீங்கள் கொம்பாகி நின்றால் நான் கொடியாக மாட்டேனா? இதோ கொடியாகி உம்மீது தழுவிப் படர்வேன்!' என்று கூறி படரத் தொடங்கினாள். அப்போது கொடியின் பாரம் தாங்காதவரைப் போல் சிவனாகிய கொம்பு சாய்ந்தது. அம்பிகை சற்றே விலக, மீண்டும் எழுந்து நின்ற கொம்பில் தன் இலைகள், காய்கள், கனிகள் யாவற்றையும் உதிர்த்து பசும் கொடியாக கொம்பில் ஏறிச் சுற்றிப் படர்ந்தாள்.
இப்போது சிவனாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை; அமைதியாக நின்றார்.
சிவசக்தி சங்கமம் பரிபூரணமாக நிகழ்ந்தேறியது. இதைக் கொண்டு தான் கொடியே, இளவஞ்சிக் கொம்பே! என்று பட்டர் பாடியிருக்கார்.


லலிதா சகஸ்ரநாமத்தில் 'ஓம் அபர்ணாயை நம:' என அம்பிகை ஸ்தோத்திரம் உள்ளது, இதற்கு 'இலைகளற்ற கொடி' என்று பெயர். இலைகள் இருப்பின் எங்கே அவை எழுப்பும் சரசர ஒலியால் சிவனின் தியானம் கலைந்திடுமோ என்பதால் இலைகளற்ற கொடியாய் அம்பிகை சுற்றிப் படர்கின்றாள். இதனால் தான் துறவிகள் சிவமயம் பெற வேண்டி, இலைகளைக் கூடப் புசியாமல் கடும் விரதம் இருப்பார்களாம்.
353. பக்தி மத் கல்ப லதிகா - பக்தர்களுக்கு கல்பகக் கொடி போன்று வேண்டியதை அளித்து உதவுகிறவள்.
மற்றொரு விளக்கம் : ' கல்ப ' என்பது சற்று குறைவை உடையது என்று பொருள்படும். ( பூரணமான பக்தி இல்லாதவர்கள் அல்லது சற்று குறைந்த பக்தி உள்ளவர்கள்) இவர்கள் பக்திமத் கல்பர்கள் எனப்படுவர். ' லதா ' என்றால் கொடி. அதன் தன்மை படருவது. அதாவது, பக்திமத் கல்பர்களைக் " கொடி " போல படரச் செய்து தன்னை அடையச் செய்பவள். சிறிது பக்தி இருந்தாலும் அதை வளர்த்து தன்னுடன் சேர்த்துக் கொள்கிறவள். அந்தக் கொடிக்கு " கொம்பு " போன்று ஆதாரமாய் இருப்பவள். சரியான வழி தெரியாமலும், சிறிது பக்தி உள்ளவர்களையும் கூட, அம்பாள் பக்குவப்படுத்தி, தன்னை பூர்ணமாக உபாசிக்கும் சக்தியை அளிக்கிறாள் என்று கருத்து.
எனக்கு வம்பே பழுத்த படியே - !

அருள்  கிடைக்கப் பெறுவதற்குக் கால நேரம் வேண்டும் அல்லவா? பொறுத்திருக்க வேண்டும் அல்லவா? தவங்கள் பல செய்திருக்க வேண்டும் அல்லவா? ஆனாலும், பட்டருக்கு அப்படிக் காலம் நேரம் எதுவும் பாராது கனிந்து அருள் தந்து விட்டாள் அந்த அம்மை. அப்படி, காலம் பாராது கனிந்த 'வம்பே பழுத்த' பழம் என்று பேசுகிறர் பட்டர். 
 பக்குவமில்லாத காலத்தில் பழுக்கும் கனிக்கு ஒப்பான வடிவமே என்கிறார். " தானாகப் பழுக்காத பழத்தை தடியால் அடித்துப் பழுக்க வைப்பது ' - என்று ஒரு
பழமொழிஉண்டு. அது போலப் பக்குவமாகாத என்னை உன் கருணை என்னும் தடியால் அடித்து வம்பாகப் பழுக்க வைத்தாய் 

மறையின் பரிமளமே - 

அந்த வேதத்தின் நுட்பமான பொருளையெல்லாம் தாங்கி, நல்ல சுகந்தமான மணம் கொண்டு திகழ்கின்றது. 
மணமில்லாத மலரை யாரும் விரும்புவதில்லை. மணம் மலருக்கு அவசியமான லட்சணம். அது போல இலக்கியங்களுக்கு மணம் அவற்றின் சொல் அழகும், பொருள் ஆழமும் ஆகும். வேதத்திற்கு அதன் சொல்லும், பொருளும் மணம் ஆகும். வேதமாகிய மலருக்கு மஹாவாக்யங்களே மணம் என்றும், அந்த மணம் அம்பாளே ஆகும்.
வேதங்களுக்கெல்லாம் தாயானவள் ஆதிபராசக்தி. ஆனால் அவளை வேதங்களில் பூத்த மலர்களின் பரிமளமே எனப் போற்றுகிறார் பட்டர்.
வேதங்களில் பூத்த மலர்கள் , அப்படியென்பது எவை? எவை?
வேதங்களின் தாயான பராசக்திக்கு வேதநாயகி, வேத ஜனனி என்றும் நாமங்கள் விளங்குகின்றன. வேதங்களின் சாரங்களாக உள்ளவை
உபநிடதங்கள். அவற்றில் பொதிந்துள்ள மகாவாக்கியங்களே வேதங்களில் பூத்த மலர்கள். வேதங்கள் கொம்பினைப் போன்றவை. அதில் சுற்றிப் படரும் கொடிகளே உபநிடதங்கள். அக்கொடியில் பூத்த மலர்கள் மகாவாக்கியங்கள். 



 பனிமால் இமயப்பிடியே, 

இப்படித் தோன்றும் அந்த அபிராமி, பனி மூடிய அந்த இமய மலையிலே பிறந்தவள். அங்கு பிறந்து, ஒரு பெண் யானை போன்று உலவி வந்தவள்.

(பிடி =பெண்யானை )
பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே - 
அவளேதான் பிரமனையும் பெற்றெடுத்தவள். பிரமன் மட்டுமல்லாது, மற்ற தேவர்களையும் பெற்றெடுத்த தாயும் அவளே.

285. ஆப்ரஹ்மகீடஜனனி - ப்ரஹ்மா முதல் புழு, பூச்சி வரை உள்ள எல்லா ஜீவன்களையும் ஈன்றவள்.கீடம் - நுண்ணிய கிருமி. தேவிக்கு எல்லா உயிர்களிடத்தும் ஒரே மாதிரியான அன்புதான். இதனையே அபிராமபட்டர் ' பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே ' - என்றார்

அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே - 

அடியேன் இப்பிறவி முடிந்து இறந்த பின் மீண்டும் இங்கே வந்து பிறக்காத படி உன் அடி நிழலைத் தந்து ஆட்கொள்ள வேண்டும்.
அம்மா அபிராமி, இப்படி எல்லாவற்றிற்கும் காரணமாகவும் காரியமாகவும் இருக்கிறாயே; என் பிறவித் தொல்லையைக் கொஞ்சம் கவனியம்மா. தேவர்களுக்கு மட்டும் தான் தாயா, நீ எனக்கும் அன்னையில்லையா?' என்கிறார். இங்கே இன்னொரு உட்பொருள்: தேவர்களுக்குப் மரணம் கிடையாது; அதனால் மறுபிறவி கிடையாது. அப்படிப்பட்ட தேவர்களுக்கும் நீ தானே தாயானாய் அபிராமி; எனக்கு மட்டும் ஏன் மரணத்தையும் மறுபிறவியையும் கொடுக்கிறாய்? பிறவாமலிருக்கும் வழி உனக்கு மட்டும் தான் தெரியும்; அதனால் தேவர்களைப் போல் என்னையும் இனிப் பிறவாமல் தடுத்தாள வேண்டும்" என்று நேரடியாகவும் ஜாடையாகவும் கேட்கிறார் பட்டர்
'நான் இறந்த பிறகு, இனி இங்கு வந்து பிறவாமல் நீ அருள் செய்ய வேண்டும்' ; 'நீயே வந்து என்னை ஆண்டு அருள் செய்ய வேண்டும்' என்றும் கேட்டுக் கொள்கிறார்.

அன்னை அபிராமியிடம் ' பிறவா வரம் வேண்டும் ' என்று கேட்கிறார் அபிராமபட்டர். அவர் மனிதன் பிறந்தால் இறப்பு உண்டு என்பதை நன்குணர்ந்து ' இனி ' - பிறவாமை வேண்டும் என்று கேட்பது நயம் பொருந்தியது. இதணையே வள்ளுவரும், ' வேண்டுங்கால் லேண்டும் பிறவாமை ' - என்பர்.
பட்டினத்தாரும், ' பிறவாதிருக்க வரந்தர வேண்டும் ' - என்கிறார். அதாவது, அன்னை அடியாரை ஆட்கொண்டால், முத்திநிலை கிட்டும். பிறகு பிறவி இல்லை. எல்லா அடியார்களும் வேண்டுவது - 'அழியா முத்தி ஆனந்தமே'
' வினை காரணமாகவே பிறவி வருகிறது. அன்னைஅபிராமியின் திருவருளால் வினையற்று விடின் உடனே பிறவாத நிலையாகிய முக்தி கிடைத்துவிடும். " என்று அன்னை அபிராமியிடம் அன்புடன் சமர்ப்பிக்கிறார் அபிராமபட்டர்.

                                                                                 அபிராமி சரணம் சரணம்!!

                                                                பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன் 


                                                                                                           
                                                 
                                                             U Tube
 Link for ANDROID  and   I PAD   PHONE
                                                 https://youtu.be/0-bm6G3sMA
                                                          
                                                                       அன்பர்கள் இசைக்கிறார்கள் 
                                                                      

                                                                                                

                                                                       U Tube
 Link for ANDROID  and   I PAD   PHONE
                                                                  https://youtu.be/PTxLqzOlmZ4                                                   
                                                                                அபிராமி சரணம் சரணம்!!
                                                                                           முருகா சரணம்                                                                              

No comments:

Post a Comment