Tuesday 5 December 2017

சுவாமிமலை வள்ளிகல்யாணம் ......செய்தித் தொடர்... 2


சுவாமிமலை வள்ளிகல்யாணம் ......செய்தித் தொடர்...  2

                                                                                   




அன்பர்களே 

அமைப்பாளர் அன்பர் ஐயப்பனிடமிருந்து அண்மையில் வந்துள்ள செய்தி.

"அன்பர்களே 
 எல்லா அன்பர்களும் சுவாமி மலைக்கு செல்லுவதற்கான பயண ஏற்பாடுகள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பார்கள்.  கல்பாக்கம் அன்பர்கள் சுவாமி மலை வள்ளி கல்யாணத்திற்கு செல்ல  50 இருக்கைகள் கொண்ட ஒரு பஸ் ஏற்பாடு செய்துள்ளார்கள் அந்த பஸ் 9.12.2017 கலை 9 மணி அளவில் சென்னை கிண்டியிலிருந்து புறப்பட்டு தாம்பரம் கேளம்பாக்கம் வழியாக கல்பக்கம் செல்லும். அங்கு மதிய உணவிற்குப் பின் ஒரு மணி அளவில்  பாண்டி கடலூர் கங்கை கொண்ட சோழபுரம் வழியாக மாலை ஆறு மணி அளவில் சுவாமிமலை சென்றடையும். மறு மார்க்கத்தில் 10.12.2017 அன்று மாலை மூன்று மணி அளவில் சுவாமிமலையில் இருந்து புறப்பட்டு இரவில் சென்னை வந்தடையும். இந்த பஸ்ஸில் கொஞ்ச இடம் உள்ளது. அன்பர்கள் எவருக்கேனும் சுவாமி மலை சென்று வர இடம் தேவை எனில் அவர்கள் அடியேனை, 9444049061 கைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.

திருப்புகழ் புத்தகத்தையும் வள்ளி கல்யாண புத்தகத்தையும் மறக்காமல் கொண்டு வர வேண்டும்.

குருஜி உபதேசித்துள்ள "வழிபாட்டில் நாம்   கடைபிடிக்க வேண்டிய நெறி முறைகளை " யும்  நினைவு படுத்துகிறார்.


"நமது குருஜி ஒவ்வொரு பஜனையிலும் சொல்லுவார்கள். நாம் திருப்புகழ் பாடும் போது ஏக சித்த மனதோடு முருகனையும் திருப்புகழையும் தவிர வேறு எந்த எண்ணத்தையும் மனதில் நுழைய விடக்கூடாது. திருப்புகழ் மட்டுமே பாடப் பட  வேண்டும் மற்ற சத்தம் வரவே கூடாது என்பார்கள். மற்ற நேரங்களிகளிலும் சாந்தி கீதம் முடிந்த பிறகும்  - அந்த அமைதி - அமைதியை கடைபிடிக்க வேண்டும். யாரும் பேசக்கூடாது. இது நமது குருஜி நம்மை அனுஷ்டிக்க சொன்னது. அதை செய்வோம்.
 அருணகிரி நாதர் சொல்லுவார். - விரித்த அருணகிரி நாதன் உரைத்த தமிழ் எனும் மாலை மிகுத்த பலமோடு ஓத மகிழ்வோனே - என்று. அது போல காவடி சிந்து பாடிய சென்னிகுளம் அண்ணாமலை  ரெட்டியாரும், -  அருணகிரி நாவில் பழக்கம் தரு சந்தத் திருப்புகழ் முழக்கம் பல அடியார்கள் கணம் ஓதினில்    அமராவதி இமையோர் செவி அடைக்கும் அண்டம் உடைக்கும் - என்று.. அப்படி பாட வேண்டும் ஆறு மணி நேரம். பாடும் போது மூடிய கண்கள் மூடியபடியே இருக்க வள்ளி நாச்சியாரையும் முருகனையும் மனக்கண் முன் நிறுத்தி  நமது குழந்தைச் செல்வங்கள் அவரவர்கள் விருபப் படியே வரன்கள் அமையப்பெற்று சகல செல்வ மோக மிக்க பெருவாழ்வு வாழ , காதலாகி , கசிந்து  , கண்ணீர் மல்கி திருப்புகழ் பாட வேண்டும் அதற்கு நம்முடைய குருஜி நம் மனதில் சனித்தியமாக வீற்றிருந்து அருளுவார்."


முருகா சரணம்  முருகா சரணம்  முருகா சரணம்    

இந்த சந்தர்ப்பத்தில்   அன்பர்  தஞ்சை சேகர் மற்றொரு தளத்தில் தொடர்ந்து அளித்து வந்த கந்தர் அனுபூதி தொடர் விளக்கவுரையை 
"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" என்ற மஹா மந்த்ர வாக்கியத்தோடு  நிறைவு செய்தது வள்ளி கல்யாண வைபவத்துக்கு ஒரு முன்னோடி என்றே கூற வேண்டும்.

அதை   ஒரு யாக பூர்த்தியாகவே கருதுகிறோம்..அதோடு தினமும் நம்மை சுவாமிமலை வள்ளி கல்யாண வைபவத்தை நினைவு படுத்தி நம்மை தயார் நிலையில்  இருக்கச் செய்தார். "குருவாய் வருவாய் அருள்வாய் குகனே " என்ற நம் தாகத்தை தணிக்க குருமலைக்கு நம்மை அழைக்கும் தூண்டுகோலாகவும் அமைந்தது.

அந்த வகையில் ,அப்பாடலையும் விளக்கத்தையும்  மீண்டும் இங்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.



கந்தர் அநுபூதி பாடல் 51.
உருவாய், அருவாய், உளதாய், இலதாய், 
மருவாய், மலராய், மணியாய், ஔியாய்,
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 

இறைவன் உருவாய் இருப்பான். அருவமாயும் இருப்பான். அருஉருவாயும் இருப்பான். எங்கேயும் எப்போதும். எல்லாவற்றிலும் நிறைந்திருப்பான். உரு, உருவரு, அரு என்ற மூன்று நிலைகளைக் கொண்டும் அதனை கடந்தும் உள்ளவன்.
முருகன் உதித்ததை கந்தபுராணம் கூறுகிறது: ' அருவமும் உருவமுமாகி அனாதியாய் பலவாய் ஒன்றாய் பிரம்மமாய் நின்ற ஜோதிப் பிழம்பு அது ஓர் மேனியாகி கருணை கூர் முகங்கள் ஆறும் கரமது பன்னிரண்டுங் கொண்டே ஒரு திருமுருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய."

(நமக்கு உதித்தது 

உருவமாக ஏரகத்திறைவனையும் ,அருவமாக நம் குருஜியையும் ,உரு,....உருவரு, ,.......அரு  என்ற மூன்று நிலைகளிலும் இருவரையும் தரிசிக்கலாம். )

உளதாய் இலதாய் என்பதில் முருகனுடைய இருப்பு நிலையை அருணகிரிநாதர் குறிப்பிடுகின்றார். அன்பு பாராட்டுபவர்களுக்கு அவன் இருக்கின்றான். பாராட்டாதவர்களுக்கு இல்லாதவன் போல மறைந்து கொள்கிறான். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்னும் பழமொழிக்கு ஏற்ப அன்பர்களுக்கு அவன் என்றும் நீங்காத்துணையாய் இருக்கின்றான்.

(நமக்கு உதித்தது 
தொண்டராற் காணப் பெறுவோனே ... உன் அடியார்களால்
காணப்பெறும் தன்மை உடையவனே,


மிண்டராற் காணக் கிடையானே ... ஆணவம் மிக்கவர்களால்
காணக் கூடாதவனே,


 வண்டு எவ்வாறு மலர்களின்தேனைத் தேடிக் களிக்கிறதோ அவ்வாறு உனது அருளை நான் தேடிக்களிக்குமாறும்,. குரங்கு எவ்வாறு மரக்கிளைகளைத்தாண்ட வல்லதோ அவ்வாறே நானும் காலனின் பாசக் கயிற்றின்பிணிப்பைத் தாவும் வல்லமை பெறுமாறும்,செண்டாயுதத்தை* எறிந்தால்எவ்வாறு பகை மாய்க்கப்படுகிறதோ அவ்வாறு நான் பாசங்களுடன்போராடி வெல்லுமாறும், அலைந்து திரியும் என்
மனத்தை மாய்த்து சும்மா இருக்கச் செய்து மெய்யறிவைத் தந்தருள்வாயாக.)

மருவாய் மலராய்..

 மருவுதல் என்பது சேர்தல் ஆகும். மலரில் இருக்கின்ற பூந்தாது நம் மூக்குக்கு வந்து சேர்வதனால் அதற்கு மரு என்னும் பெயர் வந்தது.  

( நமக்கு உதித்தது 

குருஜி மருவாய் நம்முடன் சேர்ந்தார்.நம்மை எல்லாம் ஒன்றாய் சேர வைத்தார்.திருப்புகழ் சுகந்தத்தை நம்மிடம் சேர்த்து பரவசப்படுத்தினார்."

மருவிலும் மலரிலும் இறைவன் கலந்துள்ளதைப்போலவே மணியிலும் ஔியிலும் அவன் கலந்துள்ளான்.

எங்கும் நீக்கமற நிறைந்து அவற்றை இயக்கியும் அவை இயங்கும் பொருட்டுத் தானும் இயங்கியும் ஆன்ம முன்னேற்றத்தைச் செய்து வருகின்றான்.


(நமக்கு உதித்தது 

அவ்வாறே குருஜி நம்மை இன்றளவும் இயக்கிக் கொண்டுதான் உள்ளார்.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 

கரு என்றால் மூலப்பொருள்; வித்தானவன் இறைவன். எல்லாவற்றுக்கும் மூலமாய் முளைத்தவன். உயிருக்கு உயிராய் விளங்குபவன்..
ஆன்மாக்களுக்கு கருவைத் தந்து , அதில் உயிர் பொருந்தும்படிச் செய்கின்றான். எந்த உயிர் எந்த கருவில் சேர வேண்டுமோ அவற்றில் தானே கலந்து அவனே கருவாகவும் , உயிராகவும் விளங்குகின்றான். அவன் கருவாய் , உயிராய் ஒருமுறை இருந்து விட்டு ஒதுங்கிக் கொள்வதில்லை ..மாறாக அந்த கருவோடும் உயிரோடும் இருந்து , கலந்து இருந்து , பல பிறவிகளை எடுக்க வைத்து , அதன் குறிக்கோளை உணரவைத்து,  கதியாக உள்ள முக்தி நிலையை அடையும் வரை துணையாக இருக்கின்றான். அதன் பின்னரும் உடன் இருக்கின்றான்.

( நமக்கு உதித்தது 

குருஜி கரு. நாம் உயிர். நம்மைப் பொறுத்தவரையில் குருஜி இன்றும் நம் இதயத்தில் பிரகாசிக்கிறார்.

விதி  என்றால் வழி எனவும் பொருள் படும். இறைவனை நாடுவதற்கு வழியை அவன்தான் நம்முள் செலுத்த வேண்டும்.  வழி, வழி பாட்டு முறை, வழிபாட்டின் குறிக்கோள் யாவுமே கந்தனாக இருக்கின்றான்.

( நமக்கு உதித்தது 

குருஜி நமக்கு வழிகாட்டியாகவும்,இறைவனை நாடுவதற்கு வழியை நம்முள்  செலுத்தியும்,   வழி, வழி பாட்டு முறை, வழிபாட்டின் குறிக்கோள் யாவற்றையும் நமக்கு உணர்த்தி,நம்மை செம்மைப் படுத்தி யும்  கந்தனாகஎன்றும் அருள் பாலிக்கிறார்.


ஆடும் பரிவேல் அணி சேவல்  அதாவது வேலும் மயிலும் துணை என்று அநுபூதி பாடல் ஆரம்பமானது..

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று  அநுபூதி பாடல்  முடிகிறது.

இரண்டுமே மஹா மந்திர வாக்கியங்கள். 

கு -- அந்தகாரம், அஹங்காரம், அஞ்ஞானம் ஆகிய இருளை
ரு  -- அழிப்பவன். இருளை அழிக்க ஔி ஏற்றி வைப்பவர் குருவே. குரு என்றாலே ஞான போதகன். ஞான ஆசிரியன். அஞ்ஞான இருளை நீக்கி ஞான ஔியைத் தருபவன்.

குருவாய் வருவாய் அருள்வாய் என்கிறார்..முருகன் குருவாய் வந்தாலும் , அவன் அருள் இருந்தால்தான் அதனை உணரமுடியும்..
அருளவேண்டும்  என்ற தாகம் அன்பர்களுக்கு வேண்டும். 

அருணகிரிநாதர் உபதேசம் பெற்று , அநுபூதியை பெற்றவராய் இருந்த போதிலும் இந்தப் பாடலில் குருவாய் வர வேண்டும் என்று முருகனை ஏன் கேட்கின்றார். அதற்கு காரணம், இந்த வேண்டுகோளை அவர் தமக்காக செய்து கொள்ளவில்லை. தாம் பெற்ற அநுபூதி நிலையை மற்றவர்களும் பெற வேண்டும் என்பது அவரது கருணை உள்ளத்தின் விருப்பமாகும். நமக்காகவே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் எனத் தோன்றுகிறது.

அந்த அருணகிரிநாதரின் உள்ளத்திற்கு நன்றி செலுத்த வேண்டும்.  எவ்வாறு செலுத்துவது அவர் கூறிய நெறி முறைகளை பின்பற்றி அநுபூதி பாடல்களை பாடிக் கொண்டே இருப்பது ஒன்றுதான் நம்மால் செய்யக்கூடிய கைம்மாறாகும். 

நமது குருஜி அவர்கள் இசைவழி பாடு என்ற வழி முறையை நமக்கெல்லாம் முருகனின் ஆணையால், அருணகிரிநாதரின் ஆசியால் வழங்கி உள்ளார்கள். அதன் ஒரு பகுதியாக வள்ளிக் கல்யாணம் என்ற பத்ததியை திருப்புகழ் பாடல்கள் மூலமாக இசையோடு இசைந்து பாடும் வழிமுறையையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள்.

அந்த திருமணத்தை பழநியிலே, திருச்செந்தூரிலே, திருத்தணியிலே முருகன் நடத்திக்கொண்டான்.தற்போதுசுவாமிமலையில் .

(நமக்கு உதித்தது 

தந்தைக்கு உபதேசம் செய்த திருத்தலமான குருமலையில் அருள்பாலிக்கும் சற்குரு  பெருமானை 

"குருவாய் வருவாய் அருள்வாய்" என்று வள்ளி கல்யாணவைபத்தில் இறைஞ்சுவோம்.அருள் பெறுவோம்.    

ஏரகத்து இறைவன் பாடல் ஒன்றே இசை வடிவில் கேட்போம். 


                                                                                                                                                                             

                                                  முருகா சரணம்    

No comments:

Post a Comment