Friday 8 December 2017

அபிராமி அந்தாதி - 26




அபிராமி அந்தாதி - 26

                                                                                               


ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம்;- கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே!- மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு; நகையுடைத்தே


ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம்;

 உன்னை என்றும் போற்றிப் புகழ்பவர்கள் யார் என்று கேட்டால் இந்த ஈரேழு பதினான்கு உலகங்களையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிகின்ற மும்மூர்த்திகளான பிரம்ம விஷ்ணு மஹேஸ்வரர்கள்.

.யாரெல்லாம் உன்னைப் போற்றித் துதிக்கின்றனர் என்று?.... படைத்தல் தொழிலின் அதிபதியாம் நான்முகப்பிரம்மாவும், காத்தல் தொழிலின் அதிபதியாம்...மண்ணுண்டு...விண்ணளந்த எம்பெருமான் செங்கண் மாலும், அழித்தல் தொழிலின் அதிபதியாம் கூடல் நகரின் ஆடல் நாயகன் சிவபெருமானும் உன்னை என்நாளும் போற்றித் துதிக்கின்றனர்...


அந்த அபிராமியை வணங்குபவர்கள், எப்படிப்பட்டவர்கள்? ஒருவர், இந்த உலகைப் படைக்கிறார். ஒருவர், இந்த உலகு முழுக்க வாழக் காக்கும் தொழில் புரிகிறார். இன்னொரொவர், அனைத்தையும் அழிக்கும் சம்ஹார மூர்த்தியாக விளங்குகிறார். அந்த முத்தொழில் புரிவோரையும் இந்த உலகு முழுக்கவே ஏத்திப் பாராட்டுகிறது. ஆயினும், இந்த முதல் மூவரும்கூட, அபிராமியைத் தெய்வமெனப் போற்றுகிறார்கள்.

இங்கே, "கமலாக்ஷ நிஷேவிதா" ,
" ப்ரஹ்ம உபேந்த்ர மஹேந்த்ராதி தேவ ஸமஸ்துத வைபவா "
" ஹரி ப்ரஹ்மேந்த்ர சேவிதா"
"மஹா பைரவ பூஜிதா"
என்ற லலிதா சஹஸ்ர நாமங்களை நினைவு படுத்துகிறார் அபிராமி பட்டர்.
முன்பே ஒரு பாடலில்கூட,
சிந்திப்பவர் நற்றிசைமுக நாரணர், சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப்பரமானந்தர்
என்று போற்றுவதையும் நாம் இங்கே பார்க்க வேண்டும்

கமழ்பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே!-

மணம் கமழும் கடம்ப மாலையை கூந்தலில் சூடிக் கொண்டிருக்கும் அழகில் சிறந்த தெய்வப்பெண்ணே!


மணம் நாறும் நின் தாளிணைக்கு

முத்தேவர்கள் மட்டுமன்றி, மற்றெல்லாரும் வந்து, வணங்கி, வணங்கி, அந்த அபிராமியின் பாத கமலங்களும் கூட மணம் வீசுகின்றன. வேத மாதா முதல், முத்தேவர்கள் வரை அனைவரும் அந்த அணங்கின் பாத கமலங்களில் விழுந்து வணங்குவதனால், அவர்கள் தலையில் சூடிய மலர்கள், அம்பிகையின் பாத கமலங்களில் விழுகின்றன. அந்த பாத கமலங்களும், அந்த அந்த மலர்களின் வாசத்துடன் திகழ்கின்றன.

 மும்மூர்த்திகளாலும் தொழப் படுபவள் நீ.. அவர்கள் உன்னை என்ன சொல்லித் துதிப்பார்கள்?? நாமறியோம்... தேவாதிதேவர்களெல்லாம் உன்னை என்ன சொல்லித்துதிப்பார்கள்?? நாமறியோம்.. எம் சிற்றறிவுக்கெட்டிய சிறு சொற்களால்,,

என்நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு; நகையுடைத்தே

கீழான சொற்களால் உன்னைத் துதிக்கிறேன்... அதையும் நீ ஏற்றுக் கொள்கிறாயே... இதென்ன நகைச்சுவை... ? என்கிறார். இவ்விடத்து அன்னை  அபிராமி எளியோர் சொல்லையும் தம் கவனத்தில் ஏற்கும் கருணையுடைவள் என்ற அவளது பெருமையும், அன்னையைத் துதி செய்ய மிகச்சிறந்த பாடல்களைப் பாடிவிட்டு இதெல்லாம் மிகவும் கீழான சொற்கள் என்று கூறும் அபிராமிப் பட்டரின் எளிமையும் தன்னடக்கமும் இப்பாடலின் மூலம் வெளிப்படுகின்றன..அபிராமிப் பட்டரின் பாடல்களையே அவர் அவ்வாறு சொல்லும்போது, அறியாது விளக்கமளிக்கும் இவ்வடியேனின் சொற்களெல்லாம் எவ்விடம்தான் போகும்?

இவ்விடத்து தனது நாவில் தங்குகின்ற கீழான வார்த்தைகள் என்று அபிராமிப் பட்டர் குறிப்பிடுவது அபிராமி அந்தாதியை... நமக்கெல்லாம்
அபிராமி அந்தாதியே வேதம்.. அன்னையின் புகழ்பாடும் சிறந்த பாடல் நூல். ஆனால் அதை எழுதிய அபிராமிப் பட்டரோ எளியவன் என் நாவில் இருந்து புறப்பட்ட கீழான வார்த்தைகள் என்று அடக்கமாகக் குறிப்பிடுகிறார்.. ஆனால் அதையும் நீ ஏற்றுக் கொண்டாயே... இது சிறந்த நகைச்சுவை என்கிறார்.

இப்படிப்பட்ட பாத கமலங்கள், என்னுடைய இனிமை இல்லாத பிதற்றல் மொழிகளையும் கூட ஏற்று விளங்குவது வியப்பான ஒன்றுதானே! இப்படிப்பட்ட சௌலப்யத்துடன் விளங்குகிறாளே இந்த அபிராமி பிராட்டி என்று வியக்கிறார் பட்டர்.

முதல் மூவரும் போற்றும் திருவடிகளுக்கு கீழான எனது பாடல்களும் அணிகலன்களாகப் போனது தான் என்ன வியப்பு? அன்னையின் எளிவந்த தன்மை தான் என்னே? என்று வியக்கிறார் பட்டர்.


பதினான்கு உலகினையும் முறையாகப் படைத்தும், காத்தும், அழித்தும் தொழில் புரியும் தேவாதி தேவர்கள் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளாவார்கள். இம் மும்மூர்த்திகளும் போற்றி வணங்கக்கூடிய அன்னை, அபிராமியேயாகும். இத்துணை பெருமையும், மணம் வீசுகின்ற கடம்ப மாலையையும் அணிந்தவளாகிய ஆரணங்கே! மணம் வீசுகின்ற நின் இணையடிகளில், எளியேனாகிய என்னுடைய நாவினின்று தோன்றிய வார்த்தைகளைச் (அபிராமி அந்தாதி) சாத்துகின்றேன். அவ்வாறு நின் திருவடியில் என் பாடல் ஏற்றம் பெற்றிருப்பது, எனக்கே நகைப்பை விளைவிக்கின்றது.




                                   






    












                                                                                                                                                                     

No comments:

Post a Comment